

புதுச்சேரியில் 3 மீனவ கிராமத்தின் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மோதலில் ஈடுபட்ட 654 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதி மீனவர்களுக்கும், நல்லவாடு மீனவர்களுக்கும் இடையே தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்துவதில் மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில், சுருக்குமடி வலை விவகாரம் தொடர்பாக, இவ்விரு கிராமங்களுக்கு இடையே நேற்று (ஆக. 28) நடுக்கடலில் திடீரென மோதல் ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த இருகிராம மீனவர்களும் சுளுக்கி, இரும்பு பைப் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கடற்கரையில் திரண்டனர். அவர்கள் பாட்டில், கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார் மோதலை தடுக்க வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் இருதரப்பு மீனவர்களும் கலைந்து சென்றனர்.
இதற்கிடையே இப்பிரச்சினை தொடர்பாக வம்பாகீரப்பாளையம் மற்றும் வீராம்பட்டினம் மீனவ கிராமத்தினரிடையே மாலையில் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. முகத்துவாரம் அருகே இரண்டு மீனவ கிராம மக்களும் ஆயுதங்களுடன் தாக்குதலுக்கு தயாராகினர்.
இதையடுத்து போலீஸார் அங்கு சென்று அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் அங்கும் போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதன்பிறகு மீனவர்கள் கலைந்து சென்றனர். இந்த மோதல் காரணமாக 3 மீனவ கிராமங்களிலும் பதட்டமான சூழல் இருந்து வருகிறது.
இதனால் 3 கிராம கடலோரப் பகுதிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேங்காய்திட்டு, உப்பளம் துறைமுகப்பகுதிகளிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் வருகின்ற 4-ம் தேதி வரை 3 கிராமங்களிலும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மோதல் தொடர்பாக 3 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 654 பேர் மீது தவளக்குப்பம், அரியாங்குப்பம், ஒதியஞ்சாலை ஆகிய காவல் நிலையங்களில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனிடையே நல்லவாடு பகுதியில் இன்று (ஆக. 29) புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம் மீனவர்களை சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, "மீனவர்களுக்குள் மோதல் ஏற்பட்டால் மீனவ சமுதாயத்தினருக்கு தான் அது நஷ்டம். எனவே, யாரும் பிரச்சினையில் ஈடுபட வேண்டாம். மேலும், சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வேண்டாம். விரைவில் முதல்வர் முன்னிலையில் புதுச்சேரியில் உள்ள மீனவ கிராம மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என்றார்.
நல்லவாடு மீனவர்கள், தங்களது படகுகளை உப்பளம் துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளதாகவும், இதனால் மீண்டும் பிரச்சினை உருவாகும் எனவும் கூறினர். அதற்கு சட்டப்பேரவை சபாநாயகர் "நல்லவாடு மீனவர்களின் படகுகளை பனித்திட்டில் நிறுத்த வசதி அமைத்து தருவதாக" கூறினார்.