

உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் நியமனம் செய்யப்படும் விவகாரத்தில் அம்பேத்கரின் பெண் சுதந்திரம் பற்றிய கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது என்று ஆளுநர் தமிழிசை பெருமிதம் தெரிவித்தார்.
புதுச்சேரி காலாப்பட்டு அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் பொன்விழா ஆண்டு தொடக்க விழா இன்று (ஆக.28) நடைபெற்றது. தலைமைச் செயலர் அஸ்வனி குமார் வரவேற்றார். கல்லூரியின் ஓய்வு பெற்ற முதல்வர் பட் பொன்விழா உரையாற்றினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ராமசுப்ரமணியன், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். போபால் தேசிய சட்டக் கல்லூரி துணைவேந்தர் விஜயகுமார், சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், கல்யாணசுந்தரம் எம்எல்ஏ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புதுச்சேரி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பொன்விழா ஆண்டு வளைவைத் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
‘‘மகத்தான புதுச்சேரி அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் பொன்விழா ஆண்டு தொடக்க விழாவைக் கொண்டாட இங்கு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நேற்றைய தினம் மத்திய அரசு 9 உயர் நீதிமன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்றத்தில் நியமித்தது. அதில் மூவர் பெண்கள் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். அம்பேத்கரின் பெண் சுதந்திரம் பற்றிய கனவு நனவாகிக் கொண்டிருப்பதைக் கண்டு மகிழ்கிறேன். தெலங்கானா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹீமா கோலியும் அந்த மூவரில் ஒருவர். அவருக்கு ஒரு பெண் ஆளுநராக நான் பதவிப்பிரமாணம் செய்வது பெருமையான தருணம்.
கல்லூரி தொடங்கி இரண்டாம் ஆண்டு, தனது தந்தை சட்டப்பேரவை உறுப்பினராக இக்கல்லூரியில் மாணவர் சங்கத்தை தொடங்கி வைத்தபொழுது இங்கு கல்வி பயின்ற முதல்வரும் எனது அப்பாவும் ஒரே மேடையில் பங்கேற்றனர். மீண்டும் 50 வருடங்களுக்குப் பிறகு இந்த மேடையை முதல்வர் ரங்கசாமியுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தக் கல்லூரி பல குறிப்பிடத்தக்க நீதிபதிகள், வழக்கறிஞர்களை உருவாக்கி இருக்கிறது. இன்று என்னுடன் அமர்ந்திருக்கும் அத்தகைய ஆளுமைத்திறன் கொண்ட முதல்வர் ரங்கசாமி, உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மரியாதைக்குரிய நீதிபதிகள், பல திறமையான நடைமுறை கொண்ட வழக்கறிஞர்கள் மற்றும் பல கல்வியாளர்களை அர்ப்பணித்துள்ளது என்பதில் பெருமை அடைகிறேன். அதேபோல் இங்கு பயிலும் மானவர்களும் பின்வரும் காலங்களில் இந்த மேடையில் பங்கேர்க்கும் அளவிற்கு வளர வேண்டுமென வாழ்த்துகிறேன்.’’.
இவ்வாறு ஆளுநர் தமிழிசை பேசினார்.
முன்னதாகக் கல்லூரி வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஆளுநர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.