Published : 28 Aug 2021 02:52 PM
Last Updated : 28 Aug 2021 02:52 PM

நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு: பாடல் வரிகள் மூலம் தன் நிலையை வெளிப்படுத்திய ஓபிஎஸ்

ஓபிஎஸ்: கோப்புப்படம்

சென்னை

நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு, இதுதான் என் நிலை என்று கண்ணதாசன் பாடல் வரிகளைக் குறிப்பிட்டு ஓபிஎஸ் பேசினார்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக. 28) தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண்துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் விவசாயிகளுக்கு எதிரானவை, கார்ப்பரேட்கள், தனியார்களுக்குச் சாதகமானவை, விவசாயத்தை அழிப்பது, நாட்டின் உணவுப் பாதுகாப்பை அழிப்பது என்று கூறி, டெல்லியில் தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்

வேளாண் சட்டங்களுக்கு ஆரம்பம் முதலே திமுக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. திமுகவின் தேர்தல் அறிக்கையிலும், திமுக ஆட்சி அமைந்ததும் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தது. அதன்படி இன்று சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்தீர்மானம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ், "வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசிக்க முதல்வர், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அவசரக் கோலத்தில் எதிர்க்கக் கூடாது. மத்திய அரசின் பார்வைக்கு விவசாயிகளின் கோரிக்கைகளைக் கொண்டுசெல்ல வேண்டும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்" என்றார்.

அப்போது, நீர்வளத்துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன், "வேளாண் சட்டங்களின் பாதகங்கள் குறித்து குழந்தைக்குக் கூடத் தெரியும். ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா?" எனக் கேள்வி எழுப்பினார்.

பின், தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது. பின்னர், அதிமுகவினர் மீண்டும் அவைக்கு வந்தபோது, தான் கூறியது ஓபிஎஸ் மனதைத் தனிப்பட்ட வகையில் புண்படுத்தியிருந்தால், தன் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்குமாறு துரைமுருகன் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.

அப்போது, ஓபிஎஸ், துரைமுருகன் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை இருப்பதாகக் கூறினார். மேலும், தன்னுடைய நிலையை எண்ணும்போது, "நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு, இதுதான் என் நிலை" என்ற கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவுக்கு வருவதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x