

உணவு மற்றும் சிற்றுண்டி விடுதிகளில் சுகாதாரமற்ற உணவுகள், தரம் குறைந்த உணவுகள் வழங்கப்படுவதைக் கண்காணிக்க சிறப்பு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் புதுச்சேரி அரசு சுகாதாரச் செயலர் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் அருண் இன்று (ஆக.26)கூறியிருப்பதாவது:
"புதுச்சேரியில் உள்ள பல்வேறு உணவு மற்றும் சிற்றுண்டி விடுதிகளில் சுகாதாரமற்ற மற்றும் தரம் குறைந்த உணவுகள் வழங்கப்படுவதாகப் பல தரப்பிலிருந்து இத்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
சமீபத்தில் கெட்டுப்போன பிரியாணி உண்ட நுகர்வோர் ஒருவர் உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உணவுப் பாதுகாப்புத் துறையானது புதுச்சேரியில் உள்ள அனைத்து உணவு விடுதிகளிலும் தீவிர சோதனையை முடுக்கிவிடுவது என முடிவு செய்யப்பட்டு ஒரு சிறப்பு ஆய்வுக் குழு அமைக்கப்படுள்ளது.
எனவே, இந்த அறிவிப்பின் மூலம் உணவுப் பாதுகாப்புத் துறையின் சிறப்பு ஆய்வுக் குழு மூலம் அனைத்து ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள் மற்றும் சிற்றுண்டி விடுதிகளில் இந்த வாரம் முதல் தீவிர ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா, காய்ச்சிய எண்ணெய் மறு சுழற்சி செய்யப்படுகிறதா, இறைச்சி மற்றும் கடல் உணவுகள் முறையாகக் குளிரூட்டப்படுகிறதா, உணவு தயாரிக்கும் பாத்திரங்கள் மற்றும் இடங்கள் சுத்தமாக உள்ளனவா என சோதிக்கப்படும்.
இந்த ஆய்வின்போது மேற்கண்ட விஷயங்களில் ஏதெனும் விதிமீறல்கள் இருந்தாலோ அல்லது உணவு உரிமம் மற்றும் உணவுச் சான்றிதழ் இல்லாமல் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டாலோ கடுமையான அபராதம் உட்பட உணவு விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும்".
இவ்வாறு அருண் கூறியுள்ளார்.