

புதுச்சேரியில் தொடர்ந்து ஒரு வாரமாக கரோனா ஒருநாள் எண்ணிக்கை 100-க்குக் கீழ் குறைந்துள்ளது.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஆக.26) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 2,295 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் புதுச்சேரி-45, காரைக்கால்-8, ஏனாம்-4, மாஹே-16 பேர் என மொத்தம் 73 பேருக்கு (3.18 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 163 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 604 பேரும் என மொத்தமாக மாநிலம் முழுவதும் 767 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் புதிதாக உயிரிழப்பு ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,809 ஆகவும், இறப்பு விகிதம் 1.47 சதவீதமாகவும் உள்ளது. புதிதாக 66 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 575 ( 97.91 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 16 லட்சத்து 22 ஆயிரத்து 331 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 13 லட்சத்து 76 ஆயிரத்து 686 பேருக்குத் தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் இதுவரை 7 லட்சத்து 92 ஆயிரத்து 627 பேருக்கு (2-வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த ஒருவார காலமாக, அதாவது கடந்த 20-ம் தேதி முதல் இன்றுவரை கரோனா ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை என்பது 100க்குக் கீழ் குறைந்து வருகிறது. மேலும், உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இருப்பினும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது, தடுப்பூசி செலுத்திக் கொள்வது உள்ளிட்ட கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.