மாணவர்கள் வருவாய்த்துறை சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை: புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்
புதுச்சேரியில் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும்போது வாருவாய்த்துறை சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை. நேர்முக தேர்வின்போது சமர்ப்பித்தால் போதுமானது என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் சென்டாக் மூலம் நிகழாண்டு (2021-22) நீட் அல்லாத இளநிலை தொழில் படிப்புகள், கலை அறிவியல், வணிகம், நுண்கலை படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு கடந்த 13-ம் தேதி வெளியிடப்பட்டு, அன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றது.
விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியாக ஆக.31-ம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் போது வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் குடியிருப்பு, குடியுரிமை, சாதி சான்றிதழ்கள் பெற்று விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது.
இதனால் வருவாய்த்துறை அலுவலகங்களில் சான்றிதழ்கள் பெற காலதாமதம் ஏற்படுவதால் பெற்றோரும், மாணவர்களும் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதோடு, பல்வேறு சிரமங்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் பெற்றோர், மாணவர்களின் சிரமங்களை குறைக்கும் வகையில், மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும்போது சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை. அவற்றின் நேர்முக தேர்வின்போது சமர்ப்பித்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று(ஆக. 25) வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘புதுச்சேரி மாநில மாணவர்கள் பள்ளி கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் போது வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் குடியிருப்பு, குடியுரிமை மற்றும் சாதி சான்றித் பெற்று விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது.
இதுனால் வருவாய்த்துறை அலுவலகங்களில் கூட்டம் அதிகமாவதால் சான்றிதழ் பெறுவதற்கு மாணவர்களும், பெற்றோரும் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும்போது சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை.
மேலும் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்வதற்கு முன் நடைபெறும் நேர்முக தேர்வின்போது வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை சமர்ப்பித்தல் போதுமானது.’’இவ்வாறு அவர் தெரிவித்துார்.
