

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம், குறிப்பன்குளம் கிராமத்தின் மேற்கு பகுதியில் உள்ள குளத்தில்கேரள மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட எலக்ட்ரானிக் கழிவுகளை கொட்டியுள்ளனர்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு இப்பகுதியில் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளிலும் கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள், எலக்ட்ரானிக் கழிவுகளை கொண்டுவந்து கொட்டினர். தற்போது மீண்டும் கழிவுகளை கொண்டுவரத் தொடங்கியுள்ளனர். மக்காத கழிவுகளான இவற்றை தீ வைத்து எரித்தால் மட்டுமே அழிக்க முடியும். இந்த புகையால் கடும் பாதிப்பு ஏற்படும்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: கேரள மாநிலத்தில் இருந்து ஒரு லாரி கழிவை தமிழகத்துக்குள் கொண்டுவந்து கொட்டினால், அப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. கேரள மாநிலத்தில் கழிவுகளை கொட்டவும், எரிக்கவும் அனுமதிப்பதில்லை. எனவே, அங்கிருந்து தமிழக பகுதிகளுக்குள் கழிவுகளை கொண்டு வருகின்றனர்.
சிலர் ஒதுக்குப்புறமாக இடங்களை வாங்கி, அங்கு கேரள கழிவுகளை கொட்டி தங்களுக்கு தேவையானவற்றை தரம் பிரித்து எடுத்த பின்னர், எஞ்சிய உபயோக மற்ற கழிவுகளை தீ வைத்து எரிக்கின்றனர். 80 சதவீத கழிவுகள் இவ்வாறு எரிக்கப்படுகின்றன. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் மண் வளத்தை பாதுகாக்க, கழிவுகளை கொட்டுபவர்கள், தீ வைத்து எரிப்பவர்கள் மீது கேரளாவைப்போல தமிழகத்திலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “புளியரை சோதனைச் சாவடியில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை நடக்கிறது. தொடர் சோதனையால் கேரளாவில் இருந்து கழிவுகள் கொண்டு வருவது தடுக்கப்படுகிறது” என்றார்.
சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “கழிவுகளை கொண்டு வருவது தொடர்ந்து நடக்கிறது. அபராதத் தொகையை பல மடங்கு அதிகரிப்பதுடன், கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்” என்றனர்.