

கரோனா சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்து 3 மாதங்களுக்குப் பிறகு முதல் தவணை கரோனா தடுப்பூசியைப் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செலுத்திக்கொண்டார்.
புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி கடந்த மே மாதம் 7-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அதனை அடுத்து 9-ம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். சிகிச்சை முடிந்து மே மாதம் 17-ம் தேதி வீடு திரும்பினார்.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து 3 மாதங்களுக்குப் பிறகு இன்று அவர் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். சுகாதாரத்துறை ஏற்பாட்டின்பேரில் இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமுலு தலைமையிலான சுகாதாரக் குழுவினர் அவரது வீட்டுக்கு இன்று மாலை சென்று, முதல்வர் ரங்கசாமிக்குத் தடுப்பூசி செலுத்தினர். சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் அருண், முதல்வர் வீட்டிற்கு வந்தார். தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு அரை மணி நேரம் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் அவர் இருந்தார்.
இதனிடையே அவர் நாளை டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதித்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்திக்க இருப்பதாக சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் இன்று தடுப்பூசி செலுத்தி கொண்டதால் நாளை அவர் டெல்லி செல்லும் வாய்ப்பு இல்லை என முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.