

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் 2020 முதல் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது.
ஆரம்ப கட்டத்தில் குறைந்த அளவு பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், கரோனா தொற்று தாக்கம் அதிகரித்தபோது, பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டன.
இதனிடையே செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் ஆர்.டி.பி.சி.ஆர். ஆய்வு மையத்தில் கரோனா பரிசோதனை உபகரணங்கள் வீணாகி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இம்மருத்துவமனையில் கரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட ரூ.64 கோடி மதிப்பிலான ஆர்.டி.பி.சி.ஆர்.உபகரணங்களில் ரூ.5 கோடிஅளவுக்கு காலாவதியாகிவிட்டதாக கோவையைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சி.முத்துக்குமார் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஆர்.டி.பி.சி.ஆர். உபகரணங்களை கையாண்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதா என ஆய்வு செய்ய தமிழ்நாடு மருத்துவத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டு இருந்தது. மேலும் பரிசோதனை கருவிகளை கையாளுவதில் முறைகேடுகள் இருப்பது ஆபத்து என தெரிவித்த நீதிபதிகள், உடனடி நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள நுண்ணுயிர் பிரிவில் ஆர்.டி.பி.சி.ஆர். உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை செங்கல்பட்டு வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து சீல் வைத்தனர். அந்த அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காலாவதியான உபகரணங்களை மறைப்பதற்கு முயற்சி நடைபெற்றதாக நீதிமன்றத்தில் மனுதாரர் தெரிவித்ததை அடுத்து, சீல் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் சீல் வைக்கப்பட்டதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.