

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் இருந்து லெட்சுமியூர் வழியாக கடையத்துக்கு தடம் எண் 27-ஏ என்ற அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் குத்தப்பாஞ்சான் கிராமத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சேர்மக்கனி என்ற பெண் ஒருவர் ஏறினார். அப்போது, குழந்தையுடன் ஒரு பெண் ஓடிவந்தார். பேருந்தை நிறுத்தி அவரையும் ஏற்றிக்கொள்ளுமாறு ஓட்டுநரிடம் சேர்மக்கனி கூறியுள்ளார்.
அதற்கு பேருந்து ஓட்டுநரான பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த முப்பிடாதிமுத்து, `நான் பேருந்தை நிறுத்திட்டு, அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று, அவருக்கு சேலை அணிவித்து அழைத்து வர முடியுமா?’ என்று கேட்டுள்ளார்.
ஆத்திரம் அடைந்த சேர்மக்கனி,அந்த ஓட்டுநர் மீது பல்வேறு புகார்களைக் கூறினார். `பள்ளியில் படிக்கும் தனது மகளை மாதா பட்டணத்தில் இறக்கி விடுவதற்கு பதிலாக, அங்கு பேருந்து நிற்காது என்று கூறி லட்சுமியூரில் இறக்கிவிட்டதாகவும், இதையே அவர் வழக்கமாக வைத்திருந்ததால் தனது மகளை ஆலங்குளம் பள்ளியில் சேர்த்ததாகவும்’ கூறினார்.
இதனால், முப்பிடாதிமுத்து, தகாத வார்த்தைகளால் திட்டி, செருப்பை கழட்டி அடித்துவிடுவேன் என்று கூறி, செருப்பை கழட்ட முயன்றுள்ளார். கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளார். இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவத்தை பயணி ஒருவர்செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். பேருந்து ஓட்டுநர் அநாகரிகமாக நடந்துகொண்ட செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பேருந்து ஓட்டுநர் முப்பிடாதிமுத்துவை, போக்குவரத்து அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக, கடையம் போலீஸில் சேர்மக்கனி புகார் அளித்துள்ளார். போலீஸார் விசாரிக்கின்றனர்.