

கோபி அருகே கீரிப்பள்ளம் ஓடையில் பாலம் வசதி இல்லாததால், மயானத்துக்குச் செல்ல, தற்காலிக பாலம் அமைத்து செல்லும் அவல நிலை தொடர்கிறது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சாணார்பதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது பயன்பாட்டிற்கான மயானத்திற்கு கீரிப்பள்ளம் ஓடை வழியாக செல்ல வேண்டும். ஓடையில் பாலம் வசதி இல்லாததால் ஓடை சாக்கடை நீரில் இறங்கியே மயானத்துக்கு சென்று உடல் அடக்கம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் சாணார்பதியைச் சேர்ந்த முருகையன் (70) என்பவர் உயிரிழந்தார். கீரிப்பள்ளம் ஓடையில் அதிகளவு தண்ணீர் சென்றதால் அவரது உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் ஓடையின் குறுக்கே சுமார் 60 அடி நீளத்திற்கு, ரூ.20 ஆயிரம் செலவில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு, முருகையனின் உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதுகுறித்து சாணார்பதி கிராம மக்கள் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுக்கு முன்னர் அப்போதைய வருவாய்த்துறை அமைச்சராக கோபி எம்.எல்.ஏ. கே.ஏ.செங்கோட்டையன் இருந்தபோது உயர்மட்டப் பாலம் கட்டுவதாகக் கூறி தரை மட்ட பாலம் இடிக்கப்பட்டது. ஆனால், 10 ஆண்டுகளில் மூன்று முறை பாலம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டும், பணிகள் தொடங்கவில்லை.
ஓடையில் அதிக தண்ணீர் ஓடும் காலங்களில் கிராம மக்களிடையே பணம் திரட்டி, தற்காலிக பாலம் அமைத்து உடல்களை அடக்கம் செய்து வருகிறோம். எனவே, பாலம் கட்ட அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
எம்.எல்.ஏ. விடம் விளக்கம்
இதுகுறித்து செங்கோட்டையனின் கருத்தை அறிய அவரது உதவியாளர் முருகன் என்பவரைத் தொடர்பு கொண்டபோது, ‘தற்போது செங்கோட்டையனைத் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் எதுவும் இல்லை. நாளை (17-ம் தேதி) காலை எம்.எல்.ஏ.வைப் பார்க்கும் போது தகவல் சொல்வதாக’ தெரிவித்தார்.