

இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோராக்கும் திட்டத்தின்கீழ் அவர்களை வேலை பெறுவோராக அல்லாமல் தருவோராக மாற்றுவோம் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழக அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா இ-பட்ஜெட்டாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஆக. 14) தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட் காலை 10 மணி முதல் கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது .
அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது:
''தமிழகத்தில் வேளாண் கல்வியைத் தேர்ந்தெடுப்போர் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வேலை பெறுவோராக அல்லாமல், வேலை தருவோராக மாறும்போதுதான் வேளாண் துறை உயரும். அவ்வாறு இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோராக்கும் திட்டத்தில் அரசு தீவிர கவனம் செலுத்தும். படித்து முடிக்கும்போது அவர்கள், கைகளில் சான்றிதழ் உடனும் நெஞ்சில் செயல்முறைகளுடனும் வெளியே வருவர்.
வேளாண் வணிக நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், படிக்கும்போதே வேளாண் தொழில்முனைவோராகப் பயிற்சிகள் வழங்கப்படும். முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன் இந்தத் திட்டம் உருவாக்கப்படும்.
இயற்கை எரு தயாரித்தல், மரக்கன்று வளர்ப்பு, நாற்று, காளான் வளர்ப்பு, பசுமைக் குடில் அமைத்தல், வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விடுதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களைச் செய்யவும் பயிற்சி அளிக்கப்படும். இந்தத் திட்டம் ரூ.2.68 கோடி மதிப்பீட்டில் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் செயல்படுத்தப்படும்.
ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம்
படித்த இளைஞர்கள் சொந்த ஊரிலேயே வேளாண்மையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல, ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தில் முதற்கட்டமாக 2,500 இளைஞர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும். திறன் மேம்பாடு அடைந்த இளைஞர்களுக்கு வேளாண் திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.''
இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.