புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு; ஆக. 15-க்கு பிறகு முடிவு: அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு; ஆக. 15-க்கு பிறகு முடிவு: அமைச்சர் நமச்சிவாயம்
Updated on
1 min read

புதுச்சேரி அரசு கல்வித்துறை வளாகத்தில், நிகழாண்டு சென்டாக் சேர்க்கைக்கான இணைய வழி விண்ணப்பம் விநியோகத்தை இன்று(ஆக. 13) கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,‘‘புதுச்சேரி மாநிலத்தில் நிகழாண்டு(2021-22) இளநிலை தொழில் படிப்புகள், கலை, அறிவியல், வணிகம், நுண்கலை படிப்புகளுக்கான சேர்க்கைகளுக்கு இன்று(ஆக.13) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பம் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மருத்துவக் கல்விக்கான சேர்க்கை, நீட் தேர்வு நடத்திய பின்னர் அறிவிக்கப்படும். கடந்த காலங்களில் சென்டாக் மூலம் விண்ணப்பிக்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த முறை, கரோனா தொற்று பாதிப்பு காரணமான, சென்டாக் மூலம் விண்ணப்பிக்க கட்டணம் இலவசமாக்கப்பட்டுள்ளது.

சென்டாக் மூலம் மொத்தம் 8,167 (கலை, அறிவியல் இடங்கள்-4,260, தொழில் படிப்பு இடங்கள்-3907) சேர்க்கை இடங்கள் அரசின் மூலம் நிரப்புவதால், மாணவர்கள் சேர்ந்து பயன்பெற முடியும். இதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்க ஆக.31-ம் தேதி கடைசி நாளாகும்.

இந்த முறை பிளஸ் 2- வகுப்பில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதால், அனைத்து மாணவர்களுக்கும் உரிய உயர்கல்வி கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும். கூடுதல் சேர்க்கை இடங்கள் தேவை ஏற்படின், கல்லூரிகளில் ஷிப்ட்முறை வகுப்புகள் போன்ற மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்.

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக ஆக.15-ம் தேதிக்குப் பிறகு, துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வருடன் கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும். தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு வழிமுறைகளை வழங்கியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக அரசு சார்பில் ஆராய்ந்து, ஆய்வு செய்து விரைவில் அறிவிக்கப்படும். தனியார்பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கும் சட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்.

அதனால், அரசுக்கு கூடுதல் செலவினம், அதற்கு நிதித்துறையின் அனுமதி போன்ற நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், முதல்வரிடம் பேசி அதனையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.’’இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

அப்போது கல்வித்துறை செயலர் வல்லவன், இயக்குநர் ருத்ரகவுடு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in