

புதுச்சேரி ஆம்பூர் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதை கண்டித்து பெட்டிக்கடை வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி கடந்த 2014-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சாலை பாதுகாப்புக் குழு சாலையை பராமரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. அந்தக்குழுவின் உத்தரவின்படி, சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் கடைகளை பொதுப் பணித்துறையினர் அகற்றி வருகின்றனர்.
இதனிடையே புதுச்சேரி ஆம்பூர் சாலையை ஆக்கிரமித்து கடைகளை வைத்திருக்கும் பெட்டிக்கடை வியாபாரிகளுக்கு ஆக. 11-ம் தேதிக்குள், ஆக்கிரமிப்பாளர்கள் கடைகளை தாங்களாகவே முன்வந்து அப்புறப்படுத்த வேண்டும், இல்லையெனில் நடவடிக்கை எடுத்து பொருட்கள் பறிமுதல் செய்யப்படுமென நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எனினும், அவர்கள் அகற்றவில்லை.
இந்நிலையில் புதுச்சேரி வட்டாட்சியர் குமரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஏழுமலை, உதவி பொறியாளர் துளசிங்கம், இளநிலை பொறியாளர் தேவதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் இன்று (ஆக.12) ஆம்பூர் சாலையில் இருந்த ஆக்கிமிப்புக் கடைகளை கிரேன் இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, எதிர்ப்பு தெரிவித்த ஆக்கிரமிப்பு கடைகாரர்கள், மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்க கோரி பணியைத்தடுக்க முயன்றனர். சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் குண்டுகட்டாய தூக்கிச் சென்று வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனையடுத்து, ஆம்பூர் சாலை பகுதியில் இருந்த 14 ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்றும் பணி நடைபெற்றது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘புதுச்சேரியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஆக்கிரமிப்பு அகற்றும் பணியைத் தொடங்கி மேற்கொண்டு வருகிறோம். இடையே கரோனா தொற்று காரணமாக இப்பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது ஆம்பூர் சாலையில் இருந்த ஆக்கிமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதில் எஞ்சியுள்ள 14 கடைகள் இன்று அகற்றப்படுகிறது. தொடர்ந்து புதுச்சேரி ரயில்நிலையம் எதிரே உள்ள சாலை உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.’’என்றனர்.