அடுத்த ஒலிம்பிக்கில் ரேவதி சாதிக்கத் தேவையான செலவை ஏற்கிறேன்: அமைச்சர் மூர்த்தி 

அடுத்த ஒலிம்பிக்கில் ரேவதி சாதிக்கத் தேவையான செலவை ஏற்கிறேன்: அமைச்சர் மூர்த்தி 
Updated on
1 min read

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுத் திரும்பிய மதுரை ரேவதி மீண்டும் சாதிக்கத் தேவையான செலவை ஏற்பேன் என அமைச்சர் பி. மூர்த்தி உறுதியளித்தார்.

மதுரை டோக் பெருமாட்டிக் கல்லூரி தமிழ்த் துறையின் முன்னாள் மாணவி ரேவதி. தடகள வீராங்கனையான இவர், மதுரை மாவட்டம், சக்கிமங்கலத்தைச் சேர்ந்தவர். இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சமீபத்தில் பங்கேற்றுத் திரும்பினார். அவருக்குக் கல்லூரி நிர்வாகம் சார்பில், பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடந்தது. கல்லூரி முதல்வர் கிறிஸ்டியானா சிங் தலைமை வகித்துப் பேசினார். துணை முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ வரவேற்றார்.

விழாவில் பங்கேற்ற பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, வீராங்கனை ரேவதியை வாழ்த்திப் பேசும்போது, ''மதுரை அருகிலுள்ள சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த ரேவதியை நாடே பாராட்டுகிறது. அவரை உருவாக்கிய இக்கல்லூரியில் அவருக்குப் பாராட்டு விழா நடத்துவது பெருமை. பெற்றோரை இழந்த அவர், பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து உயர்ந்துள்ளார். அவரது பாட்டி அவரை உலகளவில் உயர்த்தி இருக்கிறார். இது நாட்டுக்கே முன்மாதிரி, வரலாறு.

ரேவதி எனது தொகுதியைச் சேர்ந்தவர் என்பது எனக்குப் பெருமையாக உள்ளது. என்னைப் போன்றவர்கள் மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்தபோது, இக்கல்லூரிக்குள் நுழைய முடியுமா எனக் கனவு கண்ட காலமெல்லாம் உண்டு. இக்கல்லூரியில் இடம் கிடைப்பது மருத்துவக் கல்லூரிக்கு இணையானது.

கிராமப்புற மாணவிகளைக் கல்வியில் தரத்தில் உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, கிராமப்புறத்தில் இக்கல்லூரியின் கிளையைத் தொடங்கியுள்ளனர். ரேவதி போன்ற பல ரேவதிகள் இன்னும் உருவாகவேண்டும். ஒலிம்பிக் போட்டியில் அவர் பதக்கத்தைத் தவறவிட்டிருக்கலாம். அவர் மீண்டும் ஒலிம்பிக்கில் பங்கேற்று, சாதனை புரியத் தேவையான எல்லா செலவுகளையும் நானே ஏற்கிறேன். மீண்டும் அவர் தங்கம் வெல்வார் '' என்று அமைச்சர் கூறினார்.

விழாவில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, ''மாணவி ரேவதி மதுரை அருகே ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தாலும், அவரது விடாமுயற்சி, கடின உழைப்பால் சாதித்துள்ளார். இவரைப் போன்ற விளையாட்டு வீரர்களை ஊக்கவிக்க தமிழக முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ரொக்கப் பரிசு, அரசு வேலைவாய்ப்புகளை அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் விளையாட்டு வீரர்கள் முன்னேறவேண்டும். ரேவதி மீண்டும் அடுத்த நிலைக்கு முன்னேறி அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கை உள்ளது'' என்று தெரிவித்தார்.

விழாவில் ஆட்சியர் அனீஷ்சேகர், திருச்சி காவல்துறை கூடுதல் துணை ஆணையர் வனிதா, உடற்கல்வித் துறை இயக்குநர் செங்கதிர், கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சாந்த மீனா, ரேவதியின் பாட்டி ஆரம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவி ரேவதி, பயிற்சியாளர் கண்ணன் ஆகியோருக்குக் கல்லூரி நிர்வாகம் சார்பில், தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. ரேவதி ஏற்புரையில், கல்லூரி நிர்வாகம் மற்றும் பாராட்டியவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in