Published : 10 Aug 2021 12:45 PM
Last Updated : 10 Aug 2021 12:45 PM

ஆவினை வைத்து அரசியல் செய்யாதீர்கள்: ஓபிஎஸ், வானதிக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம்

சென்னை

ஆவினை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று ஓபிஎஸ், வானதி சீனிவாசன் ஆகியோருக்குப் பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரர்களின் விண்ணப்பத்தில் கல்வித் தகுதி குறித்துக் கேட்கப்பட்டதால் பொங்கியுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோருக்குத் தமிழகப் பால் தேவையில் 84% தேவையைப் பூர்த்தி செய்யும் தனியார் நிறுவனங்கள், தன்னிச்சையாகப் பால் கொள்முதல் விலையைக் குறைப்பதும், விற்பனை விலையை உயர்த்துவதையும் வாடிக்கையாகக் கொண்டிருப்பதால் பால் உற்பத்தியாளர்களும், நுகர்வோரும் படும் வேதனைகள் தெரியாமல் போனது ஏன்..? அப்போதெல்லாம் வாய் மூடி மவுனியாக இருந்தது ஏன்..?

அதுமட்டுமின்றி ஆவின் மண்டல அலுவலகங்களில் பணிபுரியும் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகள், ஆளுங்கட்சிப் பிரமுகர்கள், மொத்த விநியோகஸ்தர்கள் எனக் கடந்த ஆட்சியில் 1000 முதல் 5000 அட்டைகள் வரை ஆவின் நுகர்வோர் மாதாந்திர அட்டையைப் பெற்று அதன் மூலம் ஆவின் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு சுமார் 28.8 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை ஏற்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுவதாகத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் புகார் அளித்தபோது கண்டுகொள்ளாத அப்போதைய தமிழக முதல்வர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள், தற்போது சாதாரணமாக விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட கேள்விக்காக அதைப் பெரிதுபடுத்திப் பொங்குவது ஏன்? ஆவினில் ஊழல், முறைகேடுகள் செய்வதைவிட விண்ணப்பத்தில் கல்வித் தகுதி கேட்டது அவ்வளவு பெரிய குற்றமா?

அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலை உற்பத்தி செய்யும் விவசாயப் பெருமக்களின் சொந்த நிறுவனமான ஆவினில் நடைபெற்று வரும் முறைகேடுகளை ஆளுங்கட்சியாக இருக்கும்போது கண்டுகொள்ளாமல் இருப்பதும், எதிர்க்கட்சியாக இருந்தால் வானத்திற்கும், பூமிக்குமாகக் குதிப்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

பொதுமக்கள் மீதும், ஆவின் நிறுவனத்தின் மீதும், பால் உற்பத்தியாளர்கள் மீதும் உண்மையான அக்கறை இருக்குமானால் ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்களின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையைத் தமிழக அரசே நிர்ணயம் செய்திடவும், ஆவினில் முறைகேடுகள் செய்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் அதிகாரிகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்து அதனை ஆவின் கஜானாவில் சேர்த்திட ஆக்கபூர்வமான செயல்பாடுகளைச் செய்யுங்கள். அதை விடுத்து ஆவினை வைத்து க(ழ)லக அரசியல் செய்ய நினைத்தால் நீங்கள் யார் என்பதை நாங்கள் மட்டுமல்ல மக்களும் நன்கறிவர். உங்கள் நடிப்பு மக்கள் மன்றத்தில் இப்போது மட்டுமல்ல எப்போதுமே எடுபடாமல் போகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்’’.

இவ்வாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x