சென்னையில்  81 கிலோ குட்கா பறிமுதல்; வடமாநில நபர் கைது

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

செம்பியம் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் குட்கா புகையிலை பாக்கெட்டுகளைப் பதுக்கி வைத்திருந்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 81 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், ‘‘புகையிலைப் பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) என்ற திட்டம் தொடங்கப்பட்டு, காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து, சென்னை பெருநகரில் குட்கா, மாவா, ஹான்ஸ் ஆகிய தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைக் கடத்தி வருபவர்கள், விற்பனை செய்பவர்களைக் கண்காணித்து, கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, K-1 செம்பியம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (06.08.2021) இரவு சுமார் 09.30 மணிக்கு, எண். 80/1, 5C, JS பிளாட்ஸ், ஃபாக்சன் தெரு, பெரம்பூர், என்ற முகவரியில் உள்ள வீட்டைக் கண்காணித்தபோது, அங்கு ரகசியமாக குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சட்டவிரோதமான குட்கா புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்த ஶ்ரீகாந்த் (எ) சோனு (30) என்பவரைக் கைது செய்தனர். மேற்படி வீட்டில் சோதனை மேற்கொண்டு, 81 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், கூலிப், எம்.டி.எம்., ஸ்வாகத் உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் குற்றவாளி ஶ்ரீகாந்த் (எ) சோனு, உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவைச் சேர்ந்தவர் என்பதும், சென்னையில் கேட்டரிங் வேலை செய்துகொண்டு, சட்டவிரோதமாக குட்கா புகையிலை பாக்கெட்டுகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்று வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ஶ்ரீகாந்த் (எ) சோனு விசாரணைக்குப் பின்னர் இன்று (07.8.2021) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in