

புதுச்சேரி முதல்வர் 20-ம் தேதி டெல்லி சென்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களைச் சந்திக்க உள்ளார் எனப் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்தார்.
இதுகுறித்து இன்று அவர் புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘புதுச்சேரி மாநில திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதி உதவி கோரி நானும், அமைச்சர் நமச்சிவாயமும் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 11 மத்திய அமைச்சர்களைச் சந்தித்தோம்.
அப்போது, புதுச்சேரியில் புதிய சட்டப்பேரவை வளாகம் அமைப்பதற்காக, முதல்வர் ரங்கசாமி அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய கடிதத்தை வழங்கி வலியுறுத்தினோம். புதிய சட்டப்பேரவை வளாகத்துக்கான ஒட்டுமொத்த மதிப்பீடு திட்டத்தையும் வழங்குமாறு அவர்கள் கேட்டுள்ளனர்.
அதனைக் கொடுத்ததும் மத்திய அரசு அனுமதி வழங்கும் எனக் கூறியுள்ளனர். அதற்கான திட்டங்களை வகுக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். மேலும், மத்திய நிதி அமைச்சரை நாங்கள் அணுகியபோது, செப்டம்பர் மாதம் வரையிலான ரூ.330 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையைப் புதுச்சேரிக்கு வழங்கியுள்ளதாகக் கூறினார்.
புதுச்சேரிக்கான அனைத்து மத்திய அரசுத் திட்டங்களுக்கும், 90:10 சதவீதம் என்ற அடிப்படையில், மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் திட்டங்களைச் செயல்படுத்தவும் மத்திய அரசு தயாராக உள்ளது. மேலும் சுதேசி, பாரதி, ஏஎப்டி பஞ்சாலைகளும் ஐடி இண்டஸ்ட்ரியாக மாற்றும் வகையில், டெக்ஸ்டைல் பார்க், டெக்ஸ்டைல் மால் எனக் கொண்டுவர ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளவும், புதுச்சேரி மாநிலத்தின் பிற கோரிக்கைகளுக்கும் மத்திய அமைச்சர்கள் சம்மதித்துள்ளனர். இதனால் டெல்லி பயணம் வெற்றியாக அமைந்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, புதுச்சேரி மக்களுக்கான நல்லாட்சியாக அமையும். வேலைவாய்ப்பு, தொழில் துறையை மேம்படுத்தும் திட்டங்களுக்கு மத்திய அரசும் உதவத் தயாராக உள்ளது.
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்துக்கு ஆகஸ்ட் 31 வரை அவகாசம் உள்ளது. நமது பட்ஜெட்டுக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்கும்.
முதல்வர் ரங்கசாமியும் வரும் 20-ம் தேதி டெல்லி சென்று, பிரதமர், உள்துறை, நிதி அமைச்சர்களைச் சந்திக்க உள்ளார். டெல்லியில் முதல்வர் சந்திப்பின்போது, அதற்கான ஒப்புதல் கிடைக்குமெனத் தெரிகிறது.’’
இவ்வாறு செல்வம் தெரிவித்தார்.