

தமிழகத்தில் கரோனா ஊடரங்கையொட்டி 2020 மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகளுக்குத் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்தபடி ஆன்லைன் வகுப்புகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். எந்நேரமும் வீடுகளில் இருப்பதால் பல்வேறு இடங்களில் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் ரீதியான சீண்டல்களும், தொல்லைகளும் அதிகரித்துள்ளன.
கரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி 18 வயது பூர்த்தியாகாத சிறுமிகளுக்குப் பெற்றோரே திருமணம் செய்து வைப்பதும் கூடியுள்ளது. இதன்மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுக்கும் ‘போக்சோ’, குழந்தைகள் திருமணத் தடுப்பு வழக்குகள் அதிகரித்துள்ளன.
மதுரை நகரில் கடந்த 8 மாதத்தில் மட்டும் 65-க்கும் மேற்பட்ட ‘போக்சோ’ வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன்படி, மதுரை நகர், தெற்குவாசல் மகளிர் காவல் நிலையங்கள் மூலம் தலா 6 வழக்குகளும், தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்தில் 15 வழக்குகளும், திருப்பரங்குன்றம் மகளிர் காவல்நிலையத்தில் 11 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
இதுதவிர மதுரை நகரிலுள்ள பிற சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்கள் வாயிலாக 27 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சராசரியாகத் திருப்பரங்குன்றம், தல்லாகுளம் காவல் நிலைய எல்லைகளில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகமாக நடந்திருப்பது தெரிகிறது. அதேவேளையில் 18 வயது நிரம்பாத சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைத்தது தொடர்பாக 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.
மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் உட்கோட்டத்தில் 22 வழக்குகளும், மேலூர் உட்கோட்டத்தில் 9, உசிலம்பட்டி உட்கோட்டத்தில் 6, ஊமச்சிகுளம் உட்கோட்டக் காவல் நிலையங்களில் 9, சமயநல்லூர் உட்கோட்டத்தில் 14, பேரையூர் பகுதியில் 10 வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாகத் திருமங்கலம் பகுதியில் 8 மாதத்தில் 22 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், புறநகரில் அதிகரித்து இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து மகளிர் போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘‘பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களைத் தடுக்க, போக்சோ என்ற சிறப்புச் சட்டம் இருந்தும் பாலியல் குற்றம் அதிகரிக்கிறது. வறுமை போன்ற சூழலால் 18 வயது நிரம்பாத சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். இவற்றைத் தடுக்க, மகளிர் காவல் நிலையங்கள் மூலம் பெற்றோர்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனாலும் ‘போக்சோ’ வழக்குகள் அதிகரித்துள்ளன.
கரோனா காரணமாகக் கடந்த ஓராண்டாகவே பள்ளிகளுக்குச் செல்லாமல் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் மாணவியர் பலர், ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் செல்போன்களை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற சூழலில் சிலர் ஒருபடி மேலே சென்று, ஆண் நண்பர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி வீட்டைவிட்டு வெளியேறும் சம்பவங்களும் நடக்கின்றன. இதில் பெற்றோர்கள்தான் கவனமாக இருக்கவேண்டும். பெரும்பாலும் பெண் குழந்தைகளைத் தனிமையில் விடுவதைத் தவிர்க்கவேண்டும். அவர்களுடன் மனம்விட்டுப் பேச வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.