

சுற்றுலா என்ற பெயரில் வெளி மாநிலத்திலிருந்து புதுச்சேரிக்கு வருவோரை முழுமையாகத் தடுக்க வேண்டுமென புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஆக.3) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘‘உயர் நீதிமன்ற உத்தரவுகளை மீறியும், அரசின் ஆணைக்கு எதிராகவும் பல தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் 100 சதவிகிதக் கல்விக் கட்டணத்தை வசூல் செய்துள்ளனர். தற்போது வசூலித்தும் வருகின்றனர். இப்பிரச்சினையில் ஏழை, எளிய நடுத்தர மக்களின் நிலை கருதி சரியான கண்காணிப்பு மற்றும் உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
தற்போது மூன்றாம் அலையைக் கருத்தில் கொண்டு மத்திய சுகாதாரத்துறை நிபுணர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அதிகப்படுத்தி தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அந்த அடிப்படையில் பல்வேறு மாநில அரசுகள், மக்கள் அதிகம் கூடும், மார்க்கெட், சுற்றுலாத் தலங்களை மக்கள் பயன்படுத்தத் தடைவிதித்து வருகின்றனர். தமிழகத்தில் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்கள் கடற்கரை சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டு வருவதால் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்குத் தங்கு தடையின்றி வருகிறார்கள்.
கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் மட்டும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளனர். இவர்களால் கரோனா தொற்றும் கேரளாவில் அதிவேகமாகப் பரவி வரும் ஜிகா வைரஸால், புதுச்சேரியிலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். சுற்றுலா என்ற பெயரில் வெளி மாநிலத்திலிருந்து புதுச்சேரிக்கு வருவதை முழுமையாகத் தடுக்க வேண்டும். கரோனா அதிகம் உள்ள தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலப் பயணிகளை நாம் தடையின்றி அனுமதிப்பதன் மூலம் நாமே புதிதாக கரோனாவை விலை கொடுத்து வாங்கி, நம் மாநில மக்கள் மீது திணிப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கரோனாவால் மரணமடைந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க உரிய நிதி ஒதுக்கீடு செய்து, இந்த மாதத்திலேயே கரோனாவால் மரணமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு உரிய நிதி உதவி வழங்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.’’
இவ்வாறு அன்பழகன் தெரிவித்துள்ளார்.