

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவசங்கர்பாபா மீது 3-வதாக பதிவு செய்யப்பட்டுள்ள போக்சோ வழக்கில் நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள, சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா (79). இவர் தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது 3 மாணவிகள் கொடுத்த புகார்களின்பேரில் தனித்தனியாக 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் 2 போக்சோ வழக்குகளில் சிவசங்கர் பாபா ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது 3-வது போக்சோவழக்கில் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
சிவசங்கர் பாபாவை நேற்று செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 16-ம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.