உதகை சாக்லேட்டுக்கு புவிசார் குறியீடு கிடைக்குமா?- போலிகளை தவிர்க்க உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு

உதகை சாக்லேட்டுக்கு புவிசார் குறியீடு கிடைக்குமா?- போலிகளை தவிர்க்க உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
Updated on
2 min read

நீலகிரி மாவட்டம் என்றாலே நினைவுக்கு வருவது வர்க்கி, நீலகிரி தைலம், சாக்லேட்கள். இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர்கள், தங்கள் சுய தேவைகளுக்காக அவரவர் வீடுகளிலேயே சாக்லேட்டை தயாரிக்க ஆரம்பித்தனர். அவர்கள் காட்டிய வழிதான், இன்றைக்கு நாடு முழுவதும் பிரபலமடைந்துள்ள உதகையின் ஹோம் மேட் சாக்லேட். தமிழகத்தில் உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட குறிப்பிட்ட மலைப்பகுதிகளில் மட்டுமே ஹோம் மேட் சாக்லேட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு முக்கியக் காரணம், மலைப்பகுதிகளில் நிலவும் இயற்கையான சீதோஷ்ண நிலை.

கொக்கோ, வெண்ணெய் கலந்த சாக்லேட் பார்களை சுமார் 40 டிகிரி வெப்பநிலையில் உருக்கி கூழாக வரும்போது, அதில் நமது விருப்பத்தின்படி தேவையானவற்றை சேர்த்தோ, தனியாகவோ, இயற்கையாக குளிர வைத்தாலே ஹோம் மேட் சாக்லேட் தயார். உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அல்லாமல், மற்றப் பகுதிகளில் இத்தகைய சாக்லேட்களை தயாரித்தால், அவற்றை உறைய வைக்க பிரம்மாண்ட குளிர்ப்பதன அரங்குகள் தேவைப்படும். ஆனால், இயற்கையில் உறைவதில் கிடைக்கும் சுவை, அதில் இருக்காது.

ஆங்கிலேயர்கள் கற்றுத்தந்த சாக்லேட் தொழில்நுட்பம், இன்றளவும் உதகையின் சாக்லேட் பெருமைகளை உலகளவில் பேசுகிறது. உதகையிலிருந்து மும்பை, பெங்களூரு, சென்னை, கோவை உட்பட பல்வேறு நகரங்களுக்கும் சாக்லேட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 'ஹோம் மேட்' சாக்லேட்களில் நட் ராக்ஸ், புரூட் அண்டு நட், ஒயிட் சாக்லேட்கள் மிகவும் பிரபலமானவை. அதேபோல, மோல்டட் ரகத்தினாலான சாக்லேட்களைத்தான் ஆங்கிலேயர்கள் அதிக அளவில் விரும்புவதால், அவர்களின் ரசனைக்கேற்ப டிரபஃபூள், ரம் அண்ட் ரெய்சன்ஸ் ஆகியவை முன்னணியில் உள்ளன என, சாக்லேட் தயாரிப்பாளரான பசலூர் ரஹ்மான் தெரிவிக்கிறார்.

மேலும், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் வகையில் சுகர் ஃப்ரீ சாக்லேட்கள், எக்லெஸ் சாக்லேட்கள், ஜெயின் சாக்லேட்கள் என பல்வேறு ரகங்களிலும் விற்பனைக்கு உள்ளன. ஒரு கிலோ ரூ.300 முதல் ரூ.3,500 வரையில் விற்பனை செய்யப்படுகின்றன.

‘ஹோம் மேட் சாக்லேட்' என்பது, தற்போது உதகையில் குடிசைத் தொழிலாகவே பரவி வருகிறது. தொடக்கத்தில் சிலர் மட்டும் சாக்லேட் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது 1000-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இதுதொடர்பாக, உதகையில் சாக்லேட் தயாரிக்கும் தொழிலில் 26 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள என்.வி.பட்டாபிராமன் கூறும்போது, "சர்வதேச பிராண்டுகளில் சாக்லேட்கள் வெளியானாலும், அவற்றின் உற்பத்தி செலவு, சந்தைப்படுத்துதல், விளம்பர செலவு ஆகியவற்றால் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. ஆனால், ஹோம் மேட் சாக்லேட்களுக்கு அத்தகைய செலவுகள் ஏதுமில்லை. அவரவர் கண்முன்பாகவே தயாரிக்கப்படும் சாக்லேட்களை சுவையும், மணமும் மாறாமல் சுவைப்பதையே சுற்றுலா பயணிகள் விரும்புகிறார்கள்.

இந்த தொழிலை 26 ஆண்டுகளாக செய்து வருகிறேன். ஆண்டுக்கு ரூ.12 கோடி வரை சாக்லேட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது 1000-க்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிலை பாதுகாக்கும் வகையில், சாக்லேட் தயாரிப்பில் ஈடுபடுபவர்களுக்கு கடனுதவி அளித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறேன்.

இந்த திட்டத்தை கருத்தில் கொண்டு, அமெரிக்காவில் உள்ள சவுத்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் வணிகத்தில் முனைவர் பட்டம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், உதகை ஹோம்மேட் சாக்லேட் என்ற பேரில், பல போலிகளும் உருவாகி வருகின்றன. இதனால், தொழில் நலிவடைந்து வருகிறது. எனவே, உதகை ஹோம்மேட் சாக்லேட்க்கு புவிசார் குறியீடு வழங்கினால், போலிகள் தடுக்கப்பட்டு தொழில் வளமாகும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in