

கைது செய்யப்பட்ட மீனவர்கள்
ராமேசுவரம்: தமிழக மீனவர்களின் விசைப்படகை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், மீனவர்கள் 7 பேரை கைது செய்துள்ளனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 400 விசைப்படகுகளில் 2,500 மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர்.
இதில், ஜான்மெர்வின் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் பிளாசியஸ், அழகு பாண்டி, அந்தோணி பிச்சை, ரபீன், நெல்சன், அருளானந்த சேவியர், சகாய ஆனந்த் ஆகிய 7 மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தலைமன்னார் அருகே பாக்நீரிணை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் குற்றம் சாட்டி அவர்களை சிறைப்பிடித்தனர்.
சிறைப்பிடிக்கப்பட்ட 7 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அந்நாட்டு மீன்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து 7 மீனவர்களையும், மன்னார் நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தி வவுனியா சிறையில் அடைக்க உள்ளனர்.
கடந்த சில நாட்களாக எல்லை தாண்டி மீன்பிடித்த காரைக்கால் மீனவர்கள், இலங்கையின் மன்னார், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சிறுதொழில் மீனவர்களின் நண்டு வலைகளைச் சேதப்படுத்தியதாகக் கூறி, இலங்கை மீனவர்கள் வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை வெளியிட்டு தமிழக மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில், ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.