

உயிரிழந்த விஜயாள், அண்ணாமலை, மீனாட்சி, முத்துக்குமார், மீனா
பொள்ளாச்சி / தேவகோட்டை: பொள்ளாச்சி மற்றும் தேவகோட்டை பகுதிகளில் இருந்து நேபாளத்துக்கு குடும்பத்துடன் ஆன்மிகச் சுற்றுலா சென்ற 7 பேர் நேற்று முன்தினம் அங்கு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
அவர்களது உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மாக்கினாம்பட்டி, மின்நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (55). இவர் பொள்ளாச்சியில் எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மீனா (48).
இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், முத்துக்குமார் மற்றும் மீனா, பொள்ளாச்சி சிடிசி காலனியைச் சேர்ந்த பாபு, அவரது மனைவி தமிழரசி (65) ஆகியோர் கடந்த 7-ம் தேதி நேபாளத்துக்கு 13 நாட்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றனர்.
இதேபோன்று தேவகோட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் அண்ணாமலை (60), அவரது மனைவி விஜயாள் (56), சகோதரி மீனாட்சி (61) உள்ளிட்டோரும் இவர்களுடன் ஆன்மிகச் சுற்றுலாவுக்கு புறப்பட்டனர்.
இவ்வாறு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் 25-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு குழுவாக சென்னையில் இருந்து கங்கா காவேரி ரயில் மூலம் பிரயாக்ராஜ் சென்றனர். அங்கு சுவாமி தரிசனம் செய்த பின்னர் திரிவேணி சங்கமம், அயோத்தி, முக்திநாத் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று தரிசனம் செய்தனர்.
பின்னர் நேபாளம் கண்டகி மாகாணத்தில் உள்ள மனக்கமனா கோயிலுக்கு 14 பேர் கொண்ட ஒரு குழுவினர் ஒரு வேனிலும், 9 பேர் கொண்ட ஒரு குழுவினர் மற்றொரு வேனிலும் சென்று தரிசனம் செய்துவிட்டு நேற்று முன்தினம் இரவு தங்குமிடத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
சாஹித் லாகான் கிராமத்தில் வந்தபோது 14 பேர் பயணம் செய்த வேன் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையை விட்டு விலகி 150 மீட்டர் ஆழமான பள்ளத்தில் விழுந்தது.
இதில் முத்துக்குமார், அவரது மனைவி மீனா மற்றும் தமிழரசி ஆகியோரும் தேவகோட்டை அண்ணாமலை, அவரது மனைவி விஜயாள், சகோதரி மீனாட்சி மற்றும் ஒருவர் என 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பொள்ளாச்சி அன்சாரி வீதியைச் சேர்ந்த மீனாட்சி உள்ளிட்ட 9 பேர் காயம் அடைந்தனர்.
அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள சித்வான் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவர் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தநிலையில் நேபாளத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழகம் கொண்டு வர தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்மிகச் சுற்றுலா சென்று விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.