ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய 97 பேர் ஆஜர் - வழக்கறிஞர் கூறியது என்ன?

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய 97 பேர் ஆஜர் - வழக்கறிஞர் கூறியது என்ன?

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Updated on
1 min read

மதுரை: ‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐ வழக்கை சரியாக விசாரிக்கவில்லை. இதைத்தான் உயர் நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. தூய்மையான ஆட்சி தருவதாக கூறியவர்கள் நூறு பேர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என வழக்கறிஞர் ஹென்றி திபென் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி தூப்பாக்கிச் சூடு வழக்கில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக 100 பேர் மீது தனி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நூறு பேரில் 97 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். பின்னர் வழக்கு விசாரணை ஜூன் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்று நூறு பேரும் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் வழக்கறிஞர் ஹென்றி திபென் கூறியது: “ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையில், அதிகாரிகள் 21 பேரை குற்றவாளிகளாக குறிப்பிட்டிருந்தார். அந்த அறிக்கையில் ஐஜி, டிஐஜி, ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோர் துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நீதிபதி அறிக்கையில் துப்பாக்கியால் சுட்டவர்கள் பட்டியலில் 13 காவல் அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இவர்கள் யார் உத்தரவின் பேரில் சுட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 6-வது இடத்தில் இருப்பவர் மதுரை மாநகர் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிபிஐ வழக்கை சரியாக விசாரிக்கவில்லை. இதைத்தான் உயர் நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. தூய்மையான ஆட்சி தருவதாக கூறியவர்கள் நூறு பேர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். 21 அதிகாரிகள் மீது வழக்கு பதிய வேண்டும். குற்றம் செய்த காவல்துறையினரை அரசுகள் பாதுகாக்கின்றன.

அதிகாரிகள் பேச்சை கேட்டு அரசு செயல்படுகிறது. அதிகாரிகள் பேச்சை கேட்காமல் செயல்பட்டிருந்தால் திமுக அரசு தேர்தலில் தோற்று இருக்காது. இந்த வழக்கு வேறு விதமாக போயிருக்கும்” என்று அவர் கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய 97 பேர் ஆஜர் - வழக்கறிஞர் கூறியது என்ன?
எழும்பூர் அருங்காட்சியகத்தில் சோழர் கால சிற்பங்கள் சேதம்: அதிமுக குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in