

சுதீப் போகாத்தி, சுரேஷ்
சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் 3,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு திருட்டு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட நேபாள நாட்டைச் சேர்ந்த சுதீப் போகாத்தி (23) என்ற விசாரணைக் கைதி அடைக்கப்பட்டிருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை அவர் சிறையில் இருந்து தப்பினார். இதையடுத்து புழல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில், சுதீப் போகாத்தி அண்ணா நகரில் சுற்றித் திரிந்த போது பிடிபட்டார். அவர் சிறையில் இருந்து தப்பியது எப்படி என போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். புழல் சிறையில் 40 அடி சுவரில் பதிக்கப்பட்ட சோலார் கேபிள்கள் வழியாக ஏறி கீழே குதித்ததில் அவர் மயங்கி விழுந்துள்ளார். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சுயநினைவு திரும்பி அங்கிருந்து வெளியேறி உள்ளார்.
இந்நிலையில்தான் செலவுக்குப் பணம் இல்லாமல் அண்ணா நகரில் சுற்றித் திரிந்த போது போலீஸாரிடம் பிடிபட்டுள்ளார். இதற்கிடையே, போக்சோ வழக்கில் தண்டனை பெற்று புழல் சிறை 1-ல் அடைக்கப்பட்டிருந்த சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த சுரேஷ் (41) என்பவரும் அன்றைய தினம் தப்பியோடினார்.
சிறைக்கு வெளியே உள்ள அங்காடியில் பணிபுரிய அனுமதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த புதன்கிழமை காலை 7 மணிக்கு பணிக்குச் சென்ற நிலையில், 10 மணியளவில் தப்பிச் சென்றார். அவரையும் தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் குன்றத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த போது போலீஸாரிடம் பிடிபட்டார். தப்பிய 2 கைதிகளும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைதிகள் தப்பியோடியது குறித்து துறைரீதியாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பணியில் கவனக்குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் இருந்ததாக புழல் தண்டனை சிறை தலைமை வார்டர் கண்ணதாசன், முதல்நிலை வார்டர் எம்.ஆர்.மணி, இரண்டாம் நிலை வார்டர் பிரகாஷ் ஆகியோரும், புழல் விசாரணைக் கைதி சிறை உதவி ஜெயிலர் ஜோதிராமன், தலைமை வார்டர் அலெக்ஸ் கிருஷ்ணராஜ், முதல்நிலை வார்டர்கள் குணசேகர், ராஜேஷ் கண்ணா ஆகிய 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.