

தமிழக அரசில் வேளாண் துறைக்குஇந்த ஆண்டு முதல் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகளில் தமிழக வேளாண் துறைஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், வேளாண் வர்த்தக அமைப்புகளுடனான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் நேற்றுநடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையை அனைத்து தரப்பு கருத்துகளையும் கேட்டு தயாரிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேளாண் விளைபொருள் வர்த்தக சங்கங்களின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் கருத்துகளையும் கேட்டுள்ளோம். விவசாயிகளின் வாழ்வில் புதிய உயர்வை அளிக்க அரசு தயாராக உள்ளது.
குறிப்பாக, விளை பொருட்களை விவசாயிகள் எப்படி சந்தைப்படுத்துவது, வர்த்தகத்தை உயர்த்துவது குறித்த விவரங்களும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும்.
விவசாயத்தில் புதுமை திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான பயிர்களை அனைத்து பகுதிகளிலும் உற்ப்த்தி செய்வதைத் தவிர்த்து, தேவை அறிந்து பயிரிடுதல் போன்ற விஷயங்களும் இடம்பெறும்.
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காகவே உழவர் சந்தைகளை மேம்படுத்த உள்ளோம். 112 இடங்களில் உழவர் சந்தையை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது 108 சந்தைகள் செயல்படுகின்றன. 16 சந்தைகளுக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், 120 உழவர் சந்தைகள் புதியதாக படிப்படியாக அமைக்கப்படும்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 1.70 லட்சம் நெல்மூட்டைகள் வெளியில் இருப்பதைக் கண்டறிந்து, 469 இடங்களில் உள்ள கிடங்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், வேளாண் துறை மூலம் புதிய கிடங்குகள் தேவை அறிந்து கிடங்குகள் கட்டப்படும்.
தமிழகத்தில் 60 சதவீதம் தரிசுநிலங்கள் உள்ளன. இந்த ஆண்டில் 11 லட்சம் ஏக்கர் அளவுக்குவிளைநிலங்களை உருவாக்கஉள்ளோம். இதற்கான நீர்ப்பாசனபணிகள் மேற்கொள்ளப்படும். விளைபொருள் விற்பனைக்கான நடவடிக்கை, ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளோம். இந்த ஆண்டு 1.25 கோடி டன் உணவு தானிய உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.