

காஞ்சிபுரம் அருகே உள்ள ஓரிக்கை மணி மண்டபத்தில் வே.மகாதேவன் எழுதிய `ஸ்ரீ காஞ்சி சங்கரமடம் வரலாறு' என்ற ஆய்வு நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த ஆய்வு நூலை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் வியப்பாக இருக்கின்றன. தினசரி ஒரு கோயிலுக்கு போகின்றனர். தினந்தோறும் இத்தனை கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்பு என்று செய்திகள் வருகின்றன. நிலமீட்பு என்பது இவ்வளவு எளிதான காரியம் என்றால் ஏன் முந்தைய அரசுகள் இதைச் செய்யவில்லை என்பது புரியவில்லை. ஆனால், ஆக்கிரமிப்பு இடத்தை அகற்றி வேறு யாராவது ஒருவருக்கு தந்துவிடுவார்களோ என்ற அச்சம் பக்தர்கள் மத்தியில் உள்ளது. கோயில் நிலங்களை யாரும் ஒன்றும் செய்யமுடியாது. இதை நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. அதுபோல் எதுவும் நடக்காது என்று நான் பக்தர்களிடம் கூறியுள்ளேன் என்றார்.