புதுச்சேரியில் இளைஞர் மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு; தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி: பாஜக பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் கைது

புதுச்சேரியில் இளைஞர் மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு; தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி: பாஜக பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் கைது
Updated on
1 min read

புதுச்சேரியில் பில்லி சூனியம் வைக்க வந்ததாக சந்தேகமடைந்து, இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரித்த பாஜக பிரமுகர் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 3 பேரைத் தேடி வருகின்றனர்.

திருச்சி பிராட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (31). கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு வேலை தேடி வந்துள்ளார். பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை. தங்கவும் இடமில்லை.

இதனிடையே கடந்த 25-ம் தேதி நள்ளிரவு மேட்டுப்பாளையம் 4 முனை சாலை சந்திப்பு அருகில் உள்ள பெட்ரோல் பங்க் ஓரமாக சதீஷ்குமார் தூங்கச் சென்றுள்ளார். அப்போது, சதீஷ்குமாரைப் பார்த்த பெட்ரோல் பங்க் உரிமையாளரும், பாஜக வணிகப் பிரிவு மாநில அமைப்பாளருமான ராஜமவுரியா உள்ளிட்ட 7 பேர் யார், எந்த ஊர் என்று கேட்டுள்ளனர்.

அவரது தோற்றத்தைக் கண்டு கொள்ளையடிக்க அல்லது பில்லி சூனியம் வைக்க வந்திருப்பாரோ? என்று சந்தேகமடைந்து தாக்கியுள்ளனர். தொடர்ந்து, பெட்ரோல் பங்க்கில் இருந்து பெட்ரோல் பிடித்துவந்து சதீஷ்குமார் மீது ஊற்றித் தீ வைத்து எரித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சதீஷ்குமார் 60% தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து ராஜமவுரியா, அவரது தம்பி ராஜவரதன், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சிவசங்கர், குமார் ஆகிய 4 பேரையும் நேற்று இரவு கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான வெற்றி நாராயணன், சீத்தாராமன் (எ)சிவா, பிரசாந்த் ஆகிய 3 பேரைத் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in