

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி 3,000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதராமாக விளங்கும் பவானிசாகர் அணையில் 105 அடி வரை நீரினைத் தேக்கி வைக்க முடியும். பவானிசாகர் அணையின் நீர்பிடிப்புப் பகுதியாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
கடந்த 23-ம் தேதி அணையின் நீர்மட்டம் 97 அடியாக இருந்த நிலையில், பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீர் பவானிசாகர் அணையை வந்தடைந்தது. இதன் காரணமாக, அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து இன்று (ஜூலை 25) மாலை 100 அடியை எட்டியது.
இதையடுத்து, அணையின் பாதுகாப்புக் கருதி, பவானி ஆற்றில் விநாடிக்கு 3,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டவுடன், உபரி நீர் திறக்கப்படும் என்பதால், கடந்த இரு நாட்களாகவே, கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
பவானி ஆற்றின் கரையோரம் தாழ்வானப் பகுதிகளில் வசிப்போர் மேடான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், பவானி ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை ஆற்றின் அருகில் அனுமதிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இன்று மாலை பவானிசாகர் அணைக்கான நீர் வரத்து 5,344 கன அடியாக இருந்தது. தற்போது அணையின் கீழ் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. 10 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர்வரத்து இருக்குமாயின், அணையின் மேல்மதகுகள் மூலம் உபரி நீர் கூடுதலாக திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.