

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில், தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் தூய்மைப் பணியாளர்களின் குறை கேட்புக் கூட்டம் இன்று (ஜூலை 24) நடைபெற்றது. அரசுத் துறைச் செயலர்கள் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர் நலக்குழு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் ஊதியத்துக்கு ரசீது வழங்குவதில்லை. இபிஎஃப், பிஎஃப் தொகை பிடித்தம் செய்யப்படுகிறதா? எனத் தெரியவில்லை. முகக்கவசம், கையுறை வழங்கப்படவில்லை. ஆண்டுக்கு ஒரு சீருடை மட்டுமே வழங்கப்படுகிறது. ஊதியம் உயர்த்தப்படவில்லை. ஊதியத்தின் ஒரு பகுதியை மேற்பார்வையாளர்கள் வாங்கிக் கொள்கின்றனர் என சரமாரியாக புகார்களைத் தெரிவித்தனர்.
இதேபோல், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் நிரந்தரத் தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்குப் பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை அளிக்கப்படவில்லை. ஊதியம் வழங்கக் கோரி போராட்டம் நடத்திய 7 ஊழியர்கள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு புகார்களைத் தெரிவித்தனர். இப்புகார்களைக் கேட்டறிந்த ஆணையத் தலைவர் வெங்கடேசன் இது தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதுடன் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.
பின்னர் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் குறை கேட்புக் கூட்டத்தில் புகார்கள் தெரிவிக்க அச்சப்படுகின்றனர். ஒருவேளை புகார் தெரிவித்தால் அவர்களை வேலையில் இருந்து நீக்கிவிடுவார்களோ என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு நம்பிக்கை அளித்து புகாரைக் கேட்டறிந்துள்ளோம்.
ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. மாதத்துக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.13,500 ஊதியம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், ரூ.6,500 தான் கொடுப்பதாகக் கூறியுள்ளனர். அரசாணைப்படி தான் ரூ.6,500 ஊதியம் கொடுத்திருக்கிறார்கள். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ஊதியத்தை உயர்த்தித் தருவார்கள். இதற்கு இன்னும் ஓராண்டு இருப்பதாகவும், அதன்பிறகு ஊதியத்தை உயர்த்தித் தர முயற்சி எடுப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.
ஒப்பந்த ஊழியர்கள் ஒரு வண்டிக்கு 4 பேர் செல்ல வேண்டும். ஆனால், 2 பேர் செல்வதால் கஷ்டமாக இருப்பதாகவும், தூய்மைப் பணிக்கான துடைப்பம் கூட அவர்களே விலைக்கு வாங்கிப் பயன்படுத்துவதாகவும், வாகனம் பழுதாகிவிட்டால் அவர்களே சரி செய்யும் நிலை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
ஸ்வச்சதா கார்ப்பரேஷன் கீழ் பணிபுரியும் ஊழியர்கள்தான் இப்புகார்களைத் தெரிவித்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்புகார்கள் அனைத்தும் உண்மையாக இருந்தால் ஸ்வச்சதா கார்ப்பரேஷன் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன். விடுமுறை வழங்குவதில் கூட பிரச்சினை இருப்பதாகக் கூறியுள்ளனர். வாரத்துக்கு ஒரு முறை விடுமுறை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளேன். அதேபோல், நிரந்தர ஊழியர்களுக்கு 3 மாதம் ஊதியம் வழங்கவில்லை என்றனர். வரி வசூலிப்பதில் பிரச்சினை இருக்கிறது. அவை முடிந்தவுடன் ஊதியம் வழங்குவதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
இக்கூட்டத்தில் என்னென்ன புகார்கள் வந்தனவோ, அவற்றையெல்லாம் விரைவாகச் சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். அவர்கள் மீது எங்களுக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவற்றைத் தொடர்ந்து கண்காணிப்போம். மேலும், ஆளுநரைச் சந்திக்க நேரம் கொடுத்தால் இப்புகார்களை அவரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்வோம்.
புதுச்சேரியின் நிதி நிலைமைக்கேற்ப கரோனாவால் உயிரிழந்த ஊழியா் குடும்பத்துக்கு நிவாரணமும், ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் கடிதம் அனுப்பியுள்ளோம்.’’
இவ்வாறு வெங்கடேசன் தெரிவித்தார்.