‘234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்’: ஜெயலலிதாவின் அறிவிப்பால் சிறிய கட்சிகள் கலக்கம்

‘234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்’: ஜெயலலிதாவின் அறிவிப்பால் சிறிய கட்சிகள் கலக்கம்
Updated on
1 min read

234 சட்டப்பேரவை தொகுதிகளி லும் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அதிமுக வினருக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதால் அக்கட்சி யுடன் கூட்டணி சேர்வதற்காக காத்திருக்கும் சிறிய கட்சிகள் கலக்கமடைந்துள்ளன.

அதிமுகவின் துணை அமைப் பான ஜெயலலிதா பேரவை நிர்வாகிகளுடன் தமிழக முதல் வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த 31-ம் தேதி ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘234 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்’ என்று கட்சியினருக்கு அவர் உத்தரவிட்டார்.

அதிமுக கூட்டணியில், இந்திய குடியரசுக் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, அகில இந்திய ஃபார்வர்டு ப்ளாக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தற்போது இடம்பெற்றுள்ளன.

விடுதலை தமிழ்ப் புலிகள், பசும்பொன் மக்கள் கழகம் போன் றவையும் அதிமுகவை ஆதரிப் பதாக அறிவித்துள்ளன. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த மனித நேய மக்கள் கட்சி மீண்டும் அதே கூட்டணிக்கு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

முதல்வரின் திட்டம் குறித்து இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசனிடம் கேட்டபோது, “கூட்டணி பற்றி சூழலுக்கேற்ப முடிவு செய்வேன் என்று அதிமுக பொதுக்குழுவில் முதல்வர் கூறியுள்ளார். 234 தொகுதிகள் என்று அவர் கூறியுள்ள போதிலும் இரட்டை இலை சின்னத்தில்தான் பிற சிறிய கூட்டணி கட்சிகள் போட்டியிடும். எனவே, எங்களுக்கும் இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் கூறும்போது, “234 தொகுதிகளில் அதிமுகவை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். எனினும், அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளையாவது பெற வேண்டும் என்று நினைக்கிறோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in