

கோவை மாநகரக் காவல்துறை, மாவட்டக் காவல்துறை மற்றும் மேற்கு மண்டல காவல்துறையில் பணியாற்றிய ஏராளமான ஆய்வாளர்கள் அதிரடியாகப் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மே மாதம், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து திமுக அரசு பதவியேற்றது. இதைத் தொடர்ந்து, டிஜிபி அந்தஸ்திலான அதிகாரிகள் முதல் உதவி ஆய்வாளர் வரையிலான காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து பணியிடம் மாற்றப்பட்டு வருகின்றனர். கடந்த அதிமுக அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள், ஆதரவு நிலைப்பாடுகொண்டவர்கள் என்ற அடிப்படையில் கோவையிலும் காவல்துறை அதிகாரிகள் பலர் சமீபத்திய வாரங்களில் அடுத்தடுத்துப் பணியிடம் மாற்றப்பட்டனர்.
அதாவது, திமுக ஆட்சி அமைந்தவுடன் கோவையில் மாநகரக் காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, தலைமையிடக் துணை ஆணையர்கள், மேற்கு மண்டல ஐஜி, கோவை சரக டிஐஜி, மாநகர காவல்துறையில் உதவி ஆணையகள், மாவட்டக் காவல்துறையில் டிஎஸ்பிக்கள் என ஏராளமானோர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும், மாநகர காவல்துறை மற்றும் மாவட்டக் காவல்துறையில், கடந்த மாதம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆய்வாளர்கள் பணியிடம் மாற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து, தற்போதும் கோவை மாநகரக் காவல்துறை, கோவை மாவட்டக் காவல்துறை, கோவை மேற்கு மண்டலத்துக்குட்பட்ட கோவை மற்றும் சேலம் சரக காவல்துறையில் பணியாற்றி வந்த ஏராளமான ஆய்வாளர்கள் அதிரடியாக நேற்று (ஜூலை 20) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது மாற்றப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அதிமுக ஆதரவு நிலைப்பாடுகள் கொண்டவர்கள் எனவும், நீண்ட ஆண்டுகளாக வேறு மாவட்டங்களுக்குப் பணியிடங்களுக்குச் செல்லாமல்,கோவை உள்ளிட்ட மேற்கண்ட பகுதிகளிலேயே பிரிவுகள் மட்டும் மாறி, மாறிப் பணியாற்றி வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் தென் மண்டலத்துக்கும், மத்திய மண்டலத்துக்கும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
வேறு மண்டலத்துக்கு மாற்றம்
இதுதொடர்பாகக் காவல்துறையினர் வட்டாரத்தில் கூறும்போது, ''கோவை தொண்டாமுத்தூர் இன்ஸ்பெக்டர் கே.சிவக்குமார், பேரூர் மதுவிலக்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஏ.பாலமுருகன்,சூலூர் இன்ஸ்பெக்டர் எஸ்.முருகேசன், பொள்ளாச்சி தாலக்கா இன்ஸ்பெக்டர் எஸ்.விஜயன், ஆலாந்துறை இன்ஸ்பெக்டர் கே.பாஸ்கரன், நெகமம் இன்ஸ்பெக்டர் டி.வெற்றிவேல் ராஜன், ஆனைமலை இன்ஸ்பெக்டர் எஸ்.ரமேஷ்கண்ணன் உள்ளிட்ட 10 பேர் தென் மண்டலத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், துடியலூர் இன்ஸ்பெக்டர் எஸ்.பாலமுரளிசுந்தரம், கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் எஸ்.பி.சண்முகம் உள்ளிட்ட 5 பேர் தென் மண்டலத்துக்கும், மாநகர காவல்துறைக்குட்பட்ட குனியமுத்தூர் இன்ஸ்பெக்டர் டி.கே.எம்.பெரியார், மாநகர உளவுத்துறை இன்ஸ்பெக்டர்கள் என்.மணிவர்மன், பி.ரபி சுஜின் ஜோஸ், போத்தனூர் இன்ஸ்பெக்டர் எல்.முரளீதரன், ஆர்.எஸ்.புரம் இன்ஸ்பெக்டர் எம்.கனகசபாபதி ஆகிய 6 பேர் தென் மண்டலத்துக்கும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.
கோவை பீளமேடு விசாரணைப் பிரிவு இன்ஸ்பெக்டர் கே.சபரிநாதன், கோவை மாநகர் தொடர் குற்றம் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.சக்திவேல் ஆகியோர் மத்திய மண்டலத்துக்குப் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோல், வெவ்வேறு மண்டலங்களில் பணியாற்றிய 13 இன்ஸ்பெக்டர்கள் மேற்கு மண்டலத்துக்கும், மேலும் 13 இன்ஸ்பெக்டர்கள் கோவை மாநகர காவல்துறைக்கும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவு காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தனர்.