

இரட்டை வாக்குரிமையைத் தடுக்க வாக்காளர் பெயர் பட்டியலை தராமல் கேரள அதிகாரிகள் மவுனம் சாதித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழக, கேரள எல்லையான குமுளி, போடிமெட்டு, கம்பம்மெட்டு மற்றும் இடுக்கி மாவட்டத்தில் தமிழக தொழிலாளர்கள் பல ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். இவர்கள் தேர்தல் நாளன்று கேரளத்திலும், தமிழகத்திலும் மாறி மாறி வாக்களிக்கின்றனர். இந்த இரட்டை வாக்குரிமையை தடுத்து நிறுத்தக்கோரி, பல ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. அதனால் தேர்தலுக்கு முன்னர் இரு மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் சந்தித்து கூட்டம் நடத்துகின்றனர். அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை கொடுக்கின்றனர்.
ஆனால், இரு மாநில அதிகாரிகளுக்கு இடையே பரஸ்பரம் ஒற்றுமை இல்லாத காரணத்தால், கண்துடைப்புக்காக மட்டும் கூட்டம் நடத்திவிட்டு நடவடிக்கை எடுக்க மெத்தனம் காட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து தேனி மாவட்ட காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறுகையில், தமிழகம், கேரள சட்டப்பேரவை தேர்தலையொட்டி கடந்த வாரம் இடுக்கி மாவட்டம், பூப்பாறையில் இடுக்கி எஸ்.பி. ஜோசப் மற்றும் தேனி எஸ்.பி. ஜே. மகேஷ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இரட்டை வாக்குரிமை பெற்றுள்ள வாக்காளர்களின் பெயர் பட்டிலை, அம்மாநில வருவாய்த் துறையிடம் இருந்து பெற்று தமிழக அதிகாரிகளிடம் தருவதாக இடுக்கி மாவட்ட காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.
ஆனால், இதுவரை வாக்காளர் பெயர் பட்டியலைத் தராமல் மவுனம் சாதித்து வருகின்றனர். அவர்கள் பட்டியல் கொடுத்தால் மட்டுமே இரட்டை வாக்குரிமையைத் தடுக்க முடியும் என்றார்.