

பத்திரிகை செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த பசுமை தீர்ப்பாயம், வனத்துறையின் உரிய அனுமதி கிடைக்கும் வரை நன்மங்கலம் வனப்பகுதியில் பணிகளை நிறுத்திவைக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் அதிக வாகனங்களின் இயக்கத்தால் ஏற்படும் காற்று மாசு மற்றும் ஒலி மாசு ஆகியவற்றைக் குறைக்கும் நோக்கத்தோடும் சென்னை மெட்ரோ ரயில் சேவை கொண்டுவரப்பட்டது. அத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான ஐந்தாம் வழித்தடப் பாதை, நன்மங்கலம் காப்புக்காடு பகுதியின் வழியாகச் செல்கிறது. இதனால் நன்மங்கலத்தில் வாழும் இந்தியக் கழுகு என்றழைக்கப்படும் அரியவகை ஆந்தை உள்ளிட்ட 125 வகை பறவைகளும், 500 வகையான தாவரங்கள் உள்ளிட்ட உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வியலின் பாதிப்பு தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதன் அடிப்படையில் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்நிலையில் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபல் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சி.எம்.ஆர்.எல். தரப்பில், வெள்ளக்கல் முதல் மேடவாக்கம் கூட் ரோடு வரையிலான சாலை ஒருவழிப்பாதை அளவிற்கே உள்ளதால், மெட்ரோ ரயில் பணிகளுக்கு அந்த இடம் போதுமான அளவில் இருக்காது என்பதால், நன்மங்கலம் காப்புக்காட்டில் சிறிய பகுதி மட்டுமே மெட்ரோ ரயில் பாதைக்குப் பயன்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 320.92 ஹெக்டர் வனத்தில் 0.48 சதவீதமான 1.56 ஹெக்டர் மட்டுமே பயன்படுத்தபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மெட்ரோ பணிகளால் நன்மங்கலம் காட்டில் உள்ள உயிரினங்கள் மற்றும் தாவரங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடும் செய்யப்பட்டு, வனத் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வனத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “நன்மங்கலம் காடு வழியாக மெட்ரோ ரயில் பாதை அமைக்க சி.எம்.ஆர்.எல். அனுமதி கோரியுள்ளது. கூடுதல் விளக்கத்துடன் அறிக்கை தாக்கல் செய்யக் கேட்டுள்ளோம். அவ்வாறு மெட்ரோ ரயில் நிறுவனம் தாக்கல் செய்யும் அறிக்கையைப் பொறுத்தே அனுமதி அளிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உத்தரவு பிறப்பித்த தீர்ப்பாய உறுப்பினர்கள், நன்மங்கலம் வனப்பகுதியில் உள்ள உயிரினங்கள் மற்றும் தாவரங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில், அறிவியல் பூர்வமான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வனத்துறை அனுமதி வழங்கலாம் என வனத்துறைக்கு உத்தரவிட்டனர்.
வனத்துறையின் உரிய அனுமதி கிடைக்கும்வரை நன்மங்கலம் வனப் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகளை நிறுத்திவைக்க வேண்டும் எனவும், வனத்துறை அனுமதி அளித்தால் அதில் நிபுணர் குழு அளிக்கும் பரிந்துரைகளைக் கண்டிப்புடன் பின்பற்றிப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் சி.எம்.ஆர்.எல். நிறுவனத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.