

வட மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு சமூக நிதி திட்டங்களில் முதன்மையாக விளங்குகிறது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் சமூக நலத்துறையின் கீழ் ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்கத்தை மதுரை கிழக்கு, மேற்கு செல்லம்பட்டி, உசிலம்பட்டி, சேடபட்டி, மேலூர் கொட்டாம்பட்டி அலங்காநல்லூர், திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி மற்றும் நகர்ப்புறத்தைச் சேர்ந்த 548 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயம் ஆக மொத்தம் ரூ.1,99,77,888 மதிப்புள்ள 4 கிலோ மற்றும் 384 கிராம் தங்கம் மற்றும் 91 பயனாளிகளுக்கு இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சி பாண்டிக்கோயில் அருகே திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது:
திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையே கல்வி, சொத்து, வேலைவாய்ப்பு அனைத்திலும் பெண்களுக்கு சம உரிமை மற்றும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது தான். நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு வாக்குரிமை, கட்டாய ஆரம்பக் கல்வி ஆகியவற்றை அளித்து பெருமை சேர்த்த இயக்கம் திராவிட இயக்கத்தின் தூணாக திகழ்கின்ற நீதிக்கட்சி ஆகும்.
இது நிகழ்ந்தது 1920 ஆம் ஆண்டு. எப்பொழுதெல்லாம் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வருகிதோ அந்த கொள்கையை அடுத்த இடத்திற்கு கொண்டு சென்று சேர்ந்திருக்கிறது. இட ஒதுக்கீட்டை தேர்தல் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் யாரும் கல்வியறிவு பெறாதவர்கள் என்ற நிலை இல்லை. ஆனால் வட மாநிலங்களில் 30 சதவீதம் பெண்கள் தான் 18 சதவீதத்திற்கு கீழ் கல்வியறிவு பெற்றுள்ளனர். இங்கு தனிநபர் வருமானம் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் என்றால் உத்தரப் பிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களில் 75 ஆயிரத்தைத் தாண்டவில்லை.
ஆகையால் தான் இதுபோன்ற திட்டங்களை அதிகரித்து வருகிறோம். பல காரணங்களால் தங்கம் வாங்கிடாமல் இடையில் சில காலம் தடைபட்டு இருந்த இத்திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சி எடுத்து உடனடியாக நிறைவேற்ற எங்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
தமிழக அரசியல் இலவசத் திட்டங்களால் பின்தங்கி விட்டதாக பொய்யான தகவலை மீண்டும் மீண்டும், சொல்கின்றனர். இதுபோன்ற திட்டங்கள் வெறும் இலவசத் திட்டங்கள் மட்டுமல்ல சமூக நீதி, பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள். சமூக நீதியையும் பொருளாதார வளர்ச்சியையும் மனதில் கொண்டு மனிதநேயத்துடன் நிறைவேற்றப்படும் இந்தத் திட்டங்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். வட மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு சமூக நிதி திட்டங்களில் முதன்மையாக விளங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.