

கரோனா பொது முடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் சூழலில், ஸ்மார்ட் போன் இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கு அஞ்சல் அட்டை மூலம் பாடம் கற்பிக்கிறார் கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியை மகாலட்சுமி.
கரோனா பொது முடக்கத்தால் பள்ளி, கல்லூரிகள் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறது. ஆன்லைன் மூலமும், கல்வித் தொலைக் காட்சி மூலமும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோருக்கு ‘ஸ்மார்ட் போன்’ இல்லை. அவர்களில் சிலர் ஆசிரியர்களின் அறிவுறுத்தலின்பேரில் கல்வித் தொலைக் காட்சி மூலம் பாடங்களை கற்று வருகின்றனர். ஆனாலும் ஊரகப் பகுதிகளில் சில மாணவர்கள் இல்லங்களில் தொலைக்காட்சிகள் இல்லை; தொலைக்காட்சிகள் இருந்தாலும் கேபிள் இணைப்பு இல்லாததாலும் பாடங்களை சரிவர அறிய முடியவில்லை.
இந்தச் சூழலில் அரசு, கடந்த கல்வி ஆண்டில் அனைத்து வகுப்பு மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துவிட்டது. நடப்புக் கல்வி ஆண்டு தொடங்கி புத்தகங்கள் வழங்கப்பட்ட போதிலும் ஊரடங்கு நீடிப்பதால் அதே சிக்கல் தொடர்கிறது. இதைப் போக்கும் வகையில் சில அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தாங்களாகவே முன்வந்து மாணவர்களின் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று பாடம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியை மகாலட்சுமி, ‘ஸ்மார்ட் போன்’ இல்லாத மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களை கிராமத்தில் ஒரு பொதுவான இடத்துக்கு வரவழைத்து பாடம் நடத்துகிறார்.
பாடம் நடத்தி முடித்தவுடன், அவர்களிடத்தில் தனது வீட்டு முகவரியிட்ட 50 பைசா அஞ்சல் அட்டைகளைக் கொடுத்து, அதில் மாணவர்களுக்கு எழும் சந்தேகத்தை எழுதி அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறார். மேலும், மாணவர்களின் இருப்பிட முகவரி, வீட்டில் ஸ்மார்ட் போன் இல்லாத தொலைபேசி எண்களையும் பெற்றுக் கொள்கிறார்.
இதன் பிறகு மாணவர்கள் வீட்டில் பயிலும்போது, எழும் சந்தேகங்களை அஞ்சல் அட்டை மூலம் எழுதி அனுப்ப, அதன் மூலம் பதிலளிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. சமயத்தில் போனிலும் தொடர்பு கொண்டு விளக்க முடிகிறது என்கிறார்.
“மாணவர்களிடத்தில் எழுதும் திறன் குறைந்து வருகிறது. பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் அவர்களுடனான தொடர்பும் குறைந்துவிட்டது. இந்தச் சூழலில் அரிதாகிப் போன அஞ்சல் அட்டையின் பயன்பாடு குறித்து மாணவர்களிடம் அறியும் வகையில், அதன்மூலம் பாடம் நடத்தி வருகிறேன். இதன் மூலம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் இல்லாத குறை நிவர்த்தியாகும். அந்தப் பதிலை மாணவர் ஆண்டு முழுவதும் வைத்து பாதுகாத்து, தேர்வு நேரத்திலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்நடவடிக்கையால் கடிதம் எழுதும் திறனும் மேம்படும்” என்கிறார் ஆசிரியை மகாலட்சுமி. இந்தப் பணிக்கு தனது கணவரும் உத்வேகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கிறார்.