

சிவகங்கை மாவட்டம், திருப்பு வனத்தில் நான்குவழிச் சாலையை மறித்து ஆட்டுச்சந்தை நடந்தது. இதில் சமூக இடைவெளியின்றி வியாபாரிகள் குவிந்தனர்.
திருப்புவனத்தில் செவ்வாய் தோறும் ஆட்டுச் சந்தை நடப்பது வழக்கம். கரோனா ஊரடங்கால் சந்தைக்குத் தடை விதிக்கப்பட் டுள்ளது. ஜூலை 17-ம் தேதி ஆடி முதல் நாள் மற்றும் ஜூலை 21-ம் தேதி பக்ரீத். கடந்த காலங்களில் இந்த இரு பண்டிகையையொட்டி ஆடுகள் அதிகளவில் விற்பனை நடந்துள்ளன.
இந்நிலையில், நேற்று தடையை மீறி நான்குவழிச்சாலையை மறித்து ஆட்டுச் சந்தை நடந்தது. மதுரை, திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
ஆடுகளை வாங்குவதற்கு உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து அங்கு வந்த போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர். இருந்த போதிலும் சாலையோரத்தில் ஆடு விற்பனை நடந்தது.
ஆடுகளின் விலையும் அதிகரித்திருந்தது. எடைக்கு ஏற்ப வெள்ளாடு ரூ.8,000 முதல் ரூ.15,000 வரையும், கிடா ரூ.15,000 முதல் ரூ.30,000 வரையும் விலைபோனது.
இதுகுறித்து ஆடு வியா பாரிகள் கூறுகையில், இன்னும் சில நாட்களில் ஆடி மாதம் தொடங்குகிறது. ஆடி மாதத்தில் கோயில்களுக்கு ஆடு, கோழி பலியிடுவது வழக்கம். அதனால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் விலை அதிகரித்ததோடு, விற்பனையும் அதிகரித்தது. சந்தையில் ரூ.3 கோடி முதல் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளன, என்றார்.