மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி புதுச்சேரி அமைச்சரிடம் ரவிக்குமார் எம்.பி. மனு

மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி புதுச்சேரி அமைச்சரிடம் ரவிக்குமார் எம்.பி. மனு
Updated on
2 min read

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயலும் நிலையில், தமிழக அரசைப் போலப் புதுச்சேரி அரசும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை, விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் இன்று (ஜூலை 13) புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

‘‘புதுச்சேரி மாநிலத்தின் பிரத்யேகமான புவியியல் சூழல் இங்கு தண்ணீரைச் சேமித்து வைக்கும் நீர்த்தேக்கம் எதையும் கட்டுவதற்கு உகந்ததாக இல்லை. இங்குள்ள நிலம் களிமண் நிலமாக இருப்பதால் நெல்லைத் தவிர வேறு பயிர் எதையும் சாகுபடி செய்ய முடியாது.

புதுச்சேரியில் சாகுபடி செய்யப்படும் மொத்த நிலப்பரப்பான 27 ஆயிரம் ஏக்கர் என்பது நீண்டகாலமாக நிலையானதாக மாறாமல் உள்ளது. இங்குள்ள விவசாயம் பெரிதும் வடகிழக்குப் பருவமழையைத்தான் நம்பியுள்ளது. அதுமட்டுமின்றி கடலோரப் பகுதி முழுவதும் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. எனவே, புதுச்சேரி மாநில விவசாயிகள் காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ளனர்.

காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கில் புதுச்சேரிக்கு 9 டிஎம்சி தண்ணீர் வெண்டுமென வாதாடிய நிலையில், நடுவர் மன்றத்தால் ஒதுக்கப்பட்ட 7 டிஎம்சி தண்ணீரை உச்ச நீதிமன்றமும் ஒதுக்கியது. நடுவர் மன்றம் புதுச்சேரியில் குறுவை மற்றும் சம்பா இணைந்த முதல்போக சாகுபடி 27,145 ஏக்கரில் நடப்பதாகவும், தாளடி என்னும் இரண்டாம் போக சாகுபடி 15,388 ஏக்கரில் நடப்பதாகவும் உறுதி செய்தது.

புதுச்சேரியின் பிரத்யேகமான புவியியல் நிலையைக் கருத்தில்கொண்டு அங்குள்ள விவசாயிகள் இரண்டு போகம் சாகுபடி செய்வதற்கான உரிமையை உச்ச நீதிமன்றமும் தனது இறுதித் தீர்ப்பில் அங்கீகரித்துள்ளது. அதற்காக ஒதுக்கப்பட்ட 7 டிஎம்சி நீரைத் தமிழகத்தின் வழியாக நந்தலாறு, நட்டாறு, வஞ்சி ஆறு, நூலாறு, அரசலாறு, திருமலைராஜன் ஆறு, பிரவிடையான் ஆறு ஆகிய 7 ஆறுகளின் மூலம் புதுச்சேரி பெற வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தற்போது காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கான தண்ணீர் கிடைக்காது. அதனால் புதுச்சேரிக்கும் காவிரி நீர் கிடைக்காத நிலை உருவாகும். மேகதாதுவில் அணையைத் தடுப்பதற்காகத் தமிழக அரசு சட்ட ரீதியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதோடு, அரசியல் ரீதியில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர கடந்த 12-ம் தேதி அன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியுள்ளது. அதில் 3 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

புதுச்சேரி அரசும் உடனடியாக இந்தப் பிரச்சனையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் காரைக்கால் பகுதியில் நடைபெற்றுவரும் விவசாயம் முற்றாக அழியும் நிலை ஏற்படும். எனவே சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், அதற்கென அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி தமிழக அரசுடன் இணைந்து புதுச்சேரியின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்டத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.’’

இவ்வாறு அந்த மனுவில் ரவிக்குமார் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in