புதிய கூட்டணி ஒரு வாரத்தில் அறிவிப்பு: அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சரத்குமார் தகவல்

புதிய கூட்டணி ஒரு வாரத்தில் அறிவிப்பு: அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சரத்குமார் தகவல்
Updated on
2 min read

அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி விலகியுள்ளது என்றும் புதிய கூட்டணியை ஒரு வாரத்தில் அறிவிப்பேன் என்றும் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ‘தி இந்து’வின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:

சுமார் 5 ஆண்டு காலமாக அதிமுக என்ன செய்தாலும் வரவேற்ற நீங்கள் இப்போது கூட்டணியில் இருந்து விலக என்ன காரணம்?

கடந்த 5 ஆண்டு காலமாக அதிமுக கூட்டணியில் இருந்து பல் வேறு கட்சிகள் விலகிய நிலை யில், தொடர்ந்து நாங்கள் அக்கட் சிக்கு ஆதரவு தெரிவித்தோம். சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான் சமகவை கடந்த 2007-ல் தொடங்கினோம்.

ஆனால், கூட்டணி தர்மத்தை அதிமுக மீறுவதால் நாங்கள் அக்கூட்டணியில் இருந்து வெளி யேறினோம்.

அப்படியென்றால், கடந்த 5 ஆண்டு காலத்தில் உங்கள் சமுதாயம் மற் றும் தொகுதிக்கு அதிமுகவின் மூலம் எதையும் சாதித்துக்கொள்ள வில்லையா?

நான் தென்காசி சட்டப்பேரவை உறுப்பினராக எனது தொகுதிக்கும், மக்களுக்கும் மனசாட்சிப்படி என்னால் முடிந்த அத்தனை நல்ல காரியங்களையும் செய்துள் ளேன்.

முதல்வருக்கு எதிராக நீங்கள் கடிதம் எழுத சொன்னதாக எர்ணாவூர் நாராயணன் சொன்னார். அப்போது அதை பொய் என்றீர்கள். ஆனால், உங்களின் தற்போதைய நடவடிக்கை நாராயணன் சொன்னது உண்மை என்பதுபோல் உள்ளதே?

நான் கடிதம் எழுத சொன்னேன் என்பதை எர்ணாவூர் நாராயணன் ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும். அப்போது, இந்தக் கேள்விக்கு பதில் சொல்கிறேன்.

உங்கள் கட்சியினர் ஆயிரக்கணக்கில் பாஜகவில் இணைகிறார்களே, பாஜக மீது உங்களுக்கு கோபமில்லையா?

பல ஆயிரம் பேரெல்லாம் இணையவில்லை. கரு.நாகராஜன், ஜெமிலா என ஒரு 200 பேர்தான் இணைந்துள்ளார்கள். கட்சிக்காக அவர்கள் பெரிதாக எதையும் செய்யவில்லை. அவர்கள் சென்றது நல்லதுதான்.

அதிமுக கூட்டணியை உதறிவிட்டீர் கள், அடுத்து திமுகவுடன் கூட்டணி சேரப்போகிறீர்களா?

தேர்தல் பற்றிய முடிவை இப்போது அறிவிக்க மாட்டேன். கட்சியினருடன் விவாதித்து விட்டு இன்னும் ஒரு வாரத்தில் முடிவை அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

எர்ணாவூர் நாராயணன் புதுக் கட்சி

சரத்குமாரின் இந்த முடிவு குறித்து சமகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள எம்எல்ஏ எர்ணாவூர் நாராயணன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

இன்றைக்கு சமக சிதைய காரணமே நடிகர் சங்க தேர்தல்தான். நடிகர் சங்க தேர்தல் பிரச்சினையில் முதல்வரை சந்திக்க சரத்குமார் முயன்றார். ஆனால் அவருக்கு முதல்வர் அனுமதி தரவில்லை. இந்த சிறிய பிரச்சினைக்காக, அதிமுகவுக்கு எதிர்ப்பைக் காட்ட வேண்டும், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று சரத்குமார் என்னிடம் கூறினார். அதற்கு நான் மறுப்பு தெரிவிக்கவே, என்னை கட்சியில் இருந்து நீக்கினார். சமகவை கைப்பற்றலாமா என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால், ‘அது சரியான கட்சியில்லை. அது நமக்கு தேவையில்லை’ என்று எங்கள் சமுதாயத்தினர் சிலர் அறிவுரை வழங்கினர். எனவே, புதியதொரு கட்சியை இன்னும் ஒரு வார காலத்துக்குள் தொடங்கவுள்ளேன். அதற்கான பணிகளை இப்போது கவனித்து வருகிறேன். எங்கள் கட்சியின் ஆதரவு அதிமுகவுக்கே.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in