வெள்ள நிவாரணம் கிடைக்காததால் ஊராட்சித் தலைவர், விஏஓ, ஆர்ஐ சிறைபிடிப்பு: படாளம் அருகே பரபரப்பு

வெள்ள நிவாரணம் கிடைக்காததால் ஊராட்சித் தலைவர், விஏஓ, ஆர்ஐ சிறைபிடிப்பு: படாளம் அருகே பரபரப்பு
Updated on
1 min read

படாளம் அடுத்த கள்ளபிரான்புரம் ஊராட்சியில் வெள்ள நிவாரணம் வழங்கப்படாததைக் கண்டித்து ஊராட்சி தலைவரை கிராம மக்கள் சிறைபிடித்தனர். சமாதானம் செய்ய வந்த விஏஓ மற்றும் வருவாய் ஆய்வாளரையும் சிறைபிடித்து கிராம மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

படாளம் அடுத்த கள்ளபிரான்புரம் ஊராட்சியில் அத்திமனம், வள்ளுவப்பாக்கம், நெய்குப்பம், கள்ளபிரான்புரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் மதுராந்தகம் வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். ஆனால், இதுவரை நிவாரண தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வெள்ள நிவாரணம் கோரி கிராம நிர்வாக அலுவலரை முற்றுகையிட நேற்று சென்றனர். அப்போது, அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் அருகிலிருந்த ஊராட்சி மன்ற தலைவர் அழகேசனை முற்றுகையிட்டனர். பின்னர் அவரை அலுவலத்தில் வைத்து பூட்டி சிறை வைத்தனர்.

தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் சசிகலா ஆகியோர் வந்து, பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சமாதானம் அடையாத கிராம மக்கள் அவர்களையும் சிறைபிடித்தனர்.

இதுதொடர்பாக, தகவல் அறிந்த படாளம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சமாதானம் செய்தனர். மேலும், வெள்ள நிவாரண நிதி வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என, போலீஸார் உறுதி அளித்தனர். இதன்பின்னரே சிறைபிடித்த அனைவரையும் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in