Published : 27 Mar 2014 12:00 AM
Last Updated : 27 Mar 2014 12:00 AM

சிதம்பரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பில் கூட்டு சதி: ராகுல் காந்தியிடம் புகார்

சிதம்பரம் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் கடைசி நேரத்தில் குளறுபடி நடந்திருப்பதாக ராகுல் காந்தியிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் தொகுதியில் போட்டியிட மக்கள் சேவை செய்துவரும் தொழிலதிபர் மணி ரத்தினத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அறுபதுக்கும் மேற்பட்ட காங்கிரஸார் விருப்ப மனு கொடுத்திருந்தார்கள். மாநில காங்கிரஸ் தலைமையும் மணிரத்தினத்தின் பெயரையே பரிந்துரை செய்தது.

ஆனால் கடைசி நேரத்தில், வள்ளல்பெருமான், சிதம்பரம் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக் கப்பட்டார். வள்ளல்பெருமானை மாற்றக் கோரி சத்தியமூர்த்தி பவனுக்கே வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் மணிரத்தினத்தின் ஆதரவாளர்கள்.

இந்நிலையில், மணிரத்தினத்தின் பெயர் வேட்பாளர் லிஸ்டிலிருந்து எடுக்கப்பட்டதை ராகுல் காந்தியின் கவனத்துக்கு புகாராகக் கொண்டு சென்றிருக்கிறது மணிரத்தினம் தரப்பு.

இதுகுறித்து ‘தி இந்து’-விடம் பேசிய காட்டுமன்னார்கோவில் வட்டார காங்கிரஸ் தலைவர் இளங்கீரன் கூறியதாவது: தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சிதம்பரம் தொகுதிக்கு மணிரத்தினம் பெயர் மட்டும்தான் லிஸ்டில் இருந்தது. ஆனால், டெல்லியில் மணிரத்தினத்தின் பெயர் நீக்கப்பட்டு வள்ளல் பெருமானைச் சேர்த்திருக்கிறார்கள்.

இதில் மிகப்பெரிய சதி நடந்திருக்கிறது. மணி ரத்தினம் போட்டியிட்டால் திருமாவளவன் கரைசேருவது கஷ்டம் என்பதை புரிந்து கொண்டு சூழ்ச்சி செய்து மணி ரத்தினத்தின் பெயரை நீக்க வைத்திருக்றார்கள்.

இந்தச் சதியில் திமுக மற்றும் டெல்லியிலுள்ள காங்கிரஸ் முக்கியப் பிரமுகர் ஒரு வருக்கும் பங்கிருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். இது குறித்து, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஜீவ் சத்தாவ் மூலம் ராகுல் காந்திக்கு புகார் தெரிவிக்கப்பட்டுவிட்டது. நடந்த விஷயங்களை கேட்டு ராகுலும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

இந்தக் குழப்பங்களால்தான் விழுப்புரம் உள்ளிட்ட 2 தொகுதிகளுக்கு இன்னும் வேட் பாளர்களை அறிவிக்காமல் இருக்கிறார்கள். கட்சிக்கு ஒதுக்கிவிட்டு கூஜா தூக்கிகளை கோபுரத்தில் தூக்கி வைப்பதால்தான், ஒரு காலத்தில் தமிழகத்தில் ஆளும் கட்சி அந்தஸ்த்தில் இருந்த காங்கிரஸ் இப்போது அதலபாதாளத்தில் இருக்கிறது.

சிதம்பரம் தொகுதிக்கு மணிரத்தினத்தை அறிவித்து வள்ளல் பெருமானை விழுப்புரம் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிப்பார்கள் என்று நம்புகிறோம். இல்லாவிட்டால் மணிரத்தினத்தை சுயேச்சையாக நிறுத்தி எங்கள் பலத்தைக் காட்டுவோம். இதுகுறித்து அகில இந்திய தலைமைக்கு தொடர்ந்து ஃபேக்ஸ் அனுப்பிக் கொண்டிருக்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x