விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு உடனடி தீர்வு காண்க: வைகோ
தமிழக அரசு உடனடியாக தலையிட்டு விசைத்தறியாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இயங்கிவரும் இரண்டு லட்சம் விசைத்தறியாளர்கள் கடந்த 28 ஆம் தேதி முதல் 2014-ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் ஆறு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து வருவாயின்றி தவித்து வருகின்றனர்.
தினமும் 50 கோடி வீதம் 1150 கோடிக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது. அரசு தலையிட்டு கடந்த ஓராண்டில் கூலி குறைப்பால் விசைத்தறியாளர்களிடம் பிடித்தம் செய்துள்ள 200 கோடி ரூபாய் மற்றும் ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்க ஆவண செய்ய வேண்டும்.
மேலும் மாநில அரசு மின் இணைப்பு வழங்கும் போது 3 A 2 டேரிப்பில் 10 Hp வரை மட்டுமே என்பதை 15 Hp வரை உயர்த்த வேண்டும். தமிழகத்தில் ஐந்து லட்சம் விசைத்தறிகள் இயங்குவதால் விசைத்தறிக்கென தனி வாரியமும், அமைச்சகமும் ஏற்படுத்த வேண்டும்.
மேலும், மத்திய அரசு சோலார் மின்சாரம் அமைப்பதற்கு 50% மானியம் வழங்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு விசைத்தறியாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.
