

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு அரசியலைவிட்டு ஒதுங்குவதாக கூறிய சசிகலா, தற்போது அதிமுகவை மீண்டும் கைப்பற்றப்போவதாக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அதிமுகநிர்வாகிகளுடன் தொடர்ந்து போனில்பேசி வருகிறார். அந்த உரையாடல் ஆடியோவை தினந்தோறும் வெளியிட்டு வருகிறார். ஊரடங்கு முடிந்ததும் ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்துசுற்றுப்பயணத்தை தொடங்குவதாகவும் கூறி வருகிறார். அதேநேரத்தில், சசிகலாவுடன் பேசிய நிர்வாகிகள், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், அதிமுகவில் ஓபிஎஸ் - பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர். சென்னை மாவட்டசெயலாளர்களுடன் பழனிசாமி 2 முறைதனியாக ஆலோசனை நடத்தி உள்ளார். முக்கியப் பிரச்சினைகள் தொடர்பாக இருவரும் தனித்தனியாக அறிக்கை வெளியிடுகின்றனர். பிரதமருக்கும் தனித்தனியாகவே கடிதம் எழுதி வருகின்றனர்.
மேலும், கட்சியில் காலியாக இருக்கும் நிர்வாகிகள் பதவிகளை நிரப்புவதற்காக உட்கட்சித் தேர்தலும் நடத்த வேண்டி உள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அவகாசம் கோர அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர, தேர்தல் நடத்தப்படாத பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த சூழலில், அதிமுக மாவட்டசெயலாளர்கள் கூட்டம், சென்னைராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் இன்று காலை 11.30 மணிக்கு நடக்கிறது. இதில், நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.
இதில், சசிகலாவின் ஆடியோ விவகாரம், உள்கட்சித் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளுக்கு கட்சிப்பொறுப்பு, உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.