அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் குழந்தைகளின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தல்

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் குழந்தைகளின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தல்
Updated on
1 min read

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் குழந்தைகளின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இளம் குழந்தை பராமரிப்பு சேவைக்கான கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கூட்டமைப்பு அமைப்பாளர் சண்முக வேலாயுதம் திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது:

தமிழகத்தின் மக்கள் தொகையில் குழந்தைகளின் எண்ணிக்கை 39 சதவீதமாக உள்ளது. ஆனால், கொள்கை வகுப்பவர்களும், ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களும் குழந்தைகளின் உரிமைகளை கண்டுகொள்வது இல்லை.

குழந்தைகளையும் இந்நாட்டின் குடிமகன்களாக, சம உரிமை உள்ளவர்களாக கருத வேண்டும். அதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ‘உங்கள் வாக்கு குழந்தை உரிமைக்கே’ என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளோம்.

குழந்தைகளுக்கான தேசியக் கொள்கையின் அடிப்படையில், அவர்களுக்கான சட்டங்கள், விதிகள் மற்றும் திட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும். மாநில அளவில் குழந்தைகளுக்கான கொள்கை மற்றும் செயல்திட்டம் வெளியிட வேண்டும்.

ஒவ்வொரு அங்கன்வாடியிலும் 2 பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மற்றும் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் அனைத்து குழந்தைகளுக்கும் மாலை நேரத்தில் பால், ரொட்டி வழங்க வேண்டும்.

தமிழக அரசின் பட்ஜெட்டில், குழந்தைகள் நல மேம்பாட்டுக்கு 100 ரூபாயில் 39 ரூபாயை ஒதுக்க வேண்டும். 18-வயதுக்கு கீழே உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை அதிமுக, திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளோம்.

அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதி மற்றும் தேர்தல் அறிக்கைகளில், குழந்தைகளின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in