

மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் ஏமாற்றம் அடையவில்லை. ஏனெனில், எங்களுக்கு எதிர்பார்ப்பு இல்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமாகா டெல்டா மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''தேர்தலில் வெற்றி- தோல்வி என்பது அனைத்துக் கட்சிகளுக்கும் சகஜம். அது எங்களுக்கும் பொருந்தும். நாங்கள் 12 தொகுதிகள் கேட்டோம். குறைந்தபட்சம் 10 தொகுதிகளில் போட்டியிட விரும்பினோம். ஆனால், 6 தொகுதிகள்தான் கிடைத்தன. அதிலும் நாங்கள் கேட்ட தொகுதிகள் முழுமையாகக் கிடைக்கவில்லை. இருப்பினும், கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் வெற்றி பெற முயற்சி செய்தோம். ஆனால், களத்தில் பல்வேறு காரணங்களால் வெற்றி பெற முடியவில்லை. ஒவ்வொரு தேர்தலும் ஒவ்வொரு கட்சிக்குப் பாடம். இருப்பினும், தேர்தலுக்குப் பிறகு கட்சிக்கு மேலும் பலம் சேர்க்கவும், புத்துணர்வு அளிக்கவும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன்.
நிகழாண்டு காமராஜர் பிறந்த நாள் விழாவை வெகு சிறப்பாக- கரோனா விழிப்புணர்வு நாளாகக் கொண்டாட உள்ளோம். மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் ஏமாற்றம் அடையவில்லை. ஏனெனில், எங்களுக்கு எதிர்பார்ப்பு இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களது இப்போதைய இலக்கு.
பெட்ரோல்- டீசல் விலை உயர்வால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வைக் கட்டுப்படுத்த வரிகளைக் குறைப்பது உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
கரோனாவில் அரசியல் கூடாது. 3-வது அலை வந்தாலும் அதைச் சமாளிக்கும் வகையில் உரிய கட்டமைப்புகளைத் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஒருநாள்கூடத் தவறாமல் தினமும் மக்களுக்குத் தடுப்பூசி இடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தடுப்பூசிகளை வழங்குவதில் மத்திய அரசு மாநிலங்களிடத்தில் பாரபட்சம் காட்டவில்லை, காட்டக் கூடாது.
மேகேதாட்டு அணையைக் கட்டக் கூடாது. அணை கட்டினால் தமிழ்நாட்டின் விவசாயப் பகுதிகள் பாலைவனமாகிவிடும். இதை மத்திய அரசு உணர்ந்து கர்நாடகத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது.
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் கடைமடையைச் சென்று சேரவில்லை. இதனால், விதைத்த நெல் மணிகள் 20 நாட்களாகியும் முளைக்கவில்லை. கடைமடை வரை தண்ணீர் செல்ல தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களைக் குழப்பக் கூடாது. ஏனெனில், அந்த முடிவு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அரசியலை இதில் புகுத்தக் கூடாது''.
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பின்போது கட்சியின் மாவட்டத் தலைவர்கள் டி.குணா, கேவிஜி ரவீந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.