ஈரோடு தமிழன்பனுக்கு டொரண்டோ பல்கலைக்கழக விருது

ஈரோடு தமிழன்பனுக்கு டொரண்டோ பல்கலைக்கழக விருது
Updated on
1 min read

கனடா நாட்டின் மிக உயரிய பல்கலைக்கழகமான டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை அமைந்துவிட்ட செய்தியை நம் வாசகர்கள் அறிவார்கள்.

அதேபோல், தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் தங்கள் வாழ்நாளில் குறிப்பிடத்தக்கத் தொண்டு செய்தவர்களுக்கும் செய்து வருபவர்களுக்கும் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் ஒருவருக்கு விருது வழங்கும் நோக்கில் நிதி ஒன்று நிறுவப்பட்டது.

இந்த விருது நாவலர் நெடுஞ்செழியன் பெயரில் வழங்கப்படும். இந்த விருதுக்கு நடுவர்களாக டொரண்டோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை பேராசிரியரும், கல்வியாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் பங்காற்றுவார்கள்.

நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு நிறைவையொட்டி கடந்த ஜூலை 11-ஆம் நாள், 2020 அன்று முதல் விருது வழங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டது. கரோனா பரவலால் அது தள்ளிப் போடப்பட்டது. இரண்டாவது வருட விருது 11 ஜூலை 2021 அன்று வழங்குவதாக இருந்தது. அதுவும் இப்போது தள்ளிப் போடப்பட்டுவிட்டது. இந்த இரண்டு விருதுகளும் இவ்வருடம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் நிலைமை சீரடைந்ததும் வழங்கப்படும். ‘நாவலர் நெடுஞ்செழியன் தகைசால் தமிழ் இலக்கிய விருது’ என்று அழைக்கப்படும் இந்த விருது கேடயமும், ரூபாய் இரண்டு லட்சம் பணமுடிப்பும் கொண்டது.

2020ஆம் ஆண்டுக்கான ‘நாவலர் நெடுஞ்செழியன் தகைசால் தமிழ் இலக்கிய விருது’ பேராசிரியர் மறைமலை இலக்குவனாருக்கும், 2021ஆம் ஆண்டுக்கான இவ்விருது கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கும் வழங்கப்படும்.

வேலூரின் முக்கிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (விஐடி) நிறுவனரும், வேந்தருமான கோ.விசுவநாதனின் வழிகாட்டலில் இந்த விருது விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

இச்சமயம் இன்னொரு நல்ல செய்தியும் கிடைத்திருக்கிறது. ஜெர்மனியில் அமைந்துள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்த் துறை தொடர்ந்து இயங்க வழிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வட அமெரிக்காவில் இயங்கும் தமிழ் இருக்கை குழுவினர் தமிழக அரசிடம் வைத்திருந்தனர்.

அந்தக் கோரிக்கையை ஏற்று ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்குவதாகத் தமிழக முதல்வரிடமிருந்து செய்தி வந்திருக்கிறது. தமிழ் இருக்கை குழுவினர் அவருக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்திருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in