மதுரை மத்திய சிறை நகருக்கு வெளியில் மாற்றம்; முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை: சட்ட அமைச்சர் ரகுபதி தகவல்

மதுரை மத்திய சிறை நகருக்கு வெளியில் மாற்றம்; முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை: சட்ட அமைச்சர் ரகுபதி தகவல்
Updated on
2 min read

மதுரை அரசரடி பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறை வளாகத்தில் ஆண், பெண் கைதிகள் என, 1,250 பேர் வரை மட்டுமே அடைக்க வசதி இருக்கும் சூழலில், தற்போது 90 பெண் கைதிகள் உட்பட 1500க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மதுரை மத்திய சிறையை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எம்எல்ஏக்கள் கோ.தளபதி, பூமிநாதன் மற்றும் ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த ஆய்வின்போது, கைதிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். மேலும், சிறையிலுள்ள தற்போதைய வசதி, கூடுதல் வசதி பற்றியும் சிறைத்துறை டிஐஜி பழனி, கண்காணிப்பாளர் தமிழ்ச் செல்வன் மற்றும் சிறை அதிகாரிகளிடம் அமைச்சர்கள் கேட்டனர்.

சிறை வளாகத்திலுள்ள இடபற்றாக்குறை, கூடுதல் கட்டிடம் போன்ற கோரிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் வலியுறுத்தினர். இது தொடர்பாக ஆட்சியர், சிறைத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசித்த போது, நெருக்கடியான இவ்வாளகத்தில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதைவிட, நகருக்கு வெளியில் சிறை மாற்றிடலாம் என, விவாதிக்கப்பட்டதாக சிறைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஆய்வுக்குப்பின், அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்போது, இச்சிறையில் 1562 கைதிகள் இருக்கின்றனர். 1000க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகளும் உள்ளனர். அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தோம். கூடுதல் மருத்துவ வசதி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற நடவடிக்கை வேண்டும்.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய இங்குள்ள கட்டிடங்களில் போதிய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை கைதிகள் முன்வைத்தனர்.

10 ஆண்டுகளாக நிர்வாகக் கட்டிடம், பெண் கைதிகளுக்கான முதல் தளம் தவிர, எவ்வித புதிய கட்டிடமும் கட்டவில்லை. கடந்த ஆட்சியில் அப்படி கட்டியிருந்தால் கைதிகளின் நலன் காப்பதாக இருந்து இருக்கும். கைதிகளுக்கு மீது அக்கறை கொண்ட தற்போதைய முதல்வர், அவர்களுக்கு கூடுதல் வசதிகளை செய்து தரவேண்டும் என, வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, தேவையான வசதிகள் செய்து தரப்படும். நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்ககோரி சுமார் 100க்கும் மேற்பட்ட கைதிகள் மனு கொடுத்துள்ளனர். முதல்வரிடம் ஆலோசித்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு தான் புதிதாக கட்டவேண்டும். அதற்கு பதிலாக மாவட்ட நீதிமன்றம் அருகே இடம் கிடைத்தால் புதிய சிறை வளாகம் அமைக்க திட்டமிடலாம். இது பற்றி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். 7 தமிழர் விடுதலை தொடர்பாக ஆளுநர், குடியரசு தலைவருக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

அவருக்கு முழு அதிகாரம் இருக்கும் நிலையில், உரிய நடவடிக்கை இன்றி, காலம் தாழ்த்திவிட்டு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதால் குடியரசு தலைவருக்கு அறிக்கையை அனுப்பியதாக ஆளுநர் ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார்.

குடியரசுத் தலைவர் கையில் உள்ளது. அவரை கட்டாயப்படுத்த முடியாது. இதில் அரசியல் சட்ட சிக்கலை உருவாக்க பார்க்கின்றனர். எங்களது தலைவர் சிக்க மாட்டார்.

ஆலோசித்து எல்லோரும் ஏற்கும் நல்ல முடிவை எடுப்பார். ராஜிவ் காந்தி கொலை கைதி ரவிச்சந்திரன் பரோல் கேட்டு மனு கொடுத்துள்ளார். அவரது தயார், சிறைத்துறை மூலம் அரசுக்கு அனுப்பினால் முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார். நீட் தொடர்பான பாதிப்பை உயர், உச்ச நீதிமன்றத்திற்கு கருத்து தெரிவிக்கவே சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சட்டத்திற்கு விரோதமான எந்த செயலையும் திமுக அரசு செய்யாது. குழந்தைகள் விற்பனை தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிக மாக உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்திற்கு அரசு வழக்கறி ஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நீதிமன்றங்களுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் விண்ணப்பங்கள் பெற்று, எஸ்.பி, மாவட்ட நீதிபதிகளின் கருத்துக்களைக் கேட்டபின், பிற துறைகளுக்கான அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவர்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in