2 மாதங்களுக்குப் பின் திருச்சி ஆட்சியர் அலுவலகச் சாலையில் மக்கள் கூட்டம்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிப்பதற்காக சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு இன்று பல்வேறு தரப்பு மக்களும் வந்ததால், ஆட்சியர் அலுவலகச் சாலை மக்கள் கூட்டத்தால் பரபரப்புடன் காணப்பட்டது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு ஊரடங்கையொட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. பின்னர், கரோனா பரவல் குறைந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் மீண்டும் நிகழாண்டு பிப்ரவரி மாதம் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் தொடங்கி நடைபெற்று வந்தது. இதனிடையே, கரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததையடுத்து, ஏப்ரல் மாதம் முதல் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மீண்டும் ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே தற்போது ஜூலை 12-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில், குறைந்த கட்டுப்பாடுகளும், ஏராளமான தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தளர்வு காரணமாக சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் இன்றும் நடைபெறும் என்ற எண்ணத்தில், கோரிக்கை மனு அளிப்பதற்காகப் பல்வேறு தரப்பு மக்களும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே மனுக்கள் எழுதித் தருவோரிடம், பெண்கள் உள்ளிட்டோர் தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்து மனுக்களை எழுதிப் பெற்றனர். இதனால், சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு ஆட்சியர் அலுவலகச் சாலை மக்கள் கூட்டத்தால் பரபரப்புடன் காணப்பட்டது.
கன்டோன்மென்ட் காவல் உதவி ஆணையர் மு.வி.அஜய் தங்கம் தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸார், மனு அளிக்க வந்த அனைவரையும் விசாரித்து, அதன்பிறகே அலுவலகத்துக்கு உள்ளே செல்ல அனுமதித்தனர். ஆனால், மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெறாத நிலையில், பிரச்சினையின் அடிப்படையில் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு நேரில் பெற்றுக் கொண்டார்.
