மின்சார வாரியம் வைப்புத் தொகை வசூலிப்பதை ரத்து செய்க: ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

ஊரடங்கால் வருமானம் இழுந்து தவித்துவரும் மக்களிடமும் தொழில் நிறுவனங்களிடமும் மின்சார வாரியம் வைப்புத் தொகை வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூலை 05) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில் கரோனா தொற்றை குறைக்கும் வகையில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளுக்கு இடையில், தற்போது தான் சிறிது சிறிதாக நாடு இயல்பு நிலைக்கு திரும்பிகொண்டு வருகிறது.

ஊரடங்கால் சரியான வருமானம் இல்லாமல் தவித்து வரும் இவ்வேளையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் மின்சார நுகர்வோரிடம் வைப்பு தொகை வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த சிரமமான நேரத்தில் வைப்புத் தொகை செலுத்த சொல்வதால், ஏழை, எளிய, நடுத்தர மக்களும் மற்றும் தொழில் நிறுவனங்களும் மிகவும் சிரமத்திற்குள்ளாவார்கள்.

தற்போது ஊரடங்கால் அனைவரும் வீட்டில் இருந்ததால், மின் பயன்பாடு அதிகமாக இருக்கும். அதனால், தற்போது கணக்கீடு செய்தால் வைப்புத் தொகை அதிகமாக இருக்கும். மக்கள் மாதாந்திர மின் கட்டனம் செலுத்தவே சிரமப்படும் இந்நேரத்தில், வைப்பு தொகை செலுத்த சொல்வது எந்த விதத்தில் நியாயம்.

ஆகவே, தற்போது மின்சார வாரியம் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பொருளாதார சுமையை கருதியும், தொழில் நிறுவனங்களின் சிரமமான சூழ்நிலையையும் உணர்ந்து, கூடுதல் வைப்புத் தொகை வசூலிப்பதை தமிழக அரசும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகமும் இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in